இந்தியாவில் கோவிட் 19 பாதிப்பு 7.67 லட்சமாக உயர்வு!

கோவிட் 19 கிருமித் தொற்றுக்கு ஆளானவர்களின் பட்டியலில் இந்தியாவிற்கு 3ஆவது இடம்!!!

புதுடெல்லி, ஜூலை 9-

இந்தியாவில் கோவிட் 19 வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இந்நிலையில், இன்று காலை (09-07-2020) இந்தியாவின் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் இதுவரை 767296 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 24879 பேருக்கு இந்தக் கிருமித் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 487 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கோவிட் 19 வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21129 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 476378 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 269789 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 223724 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 122350 பேருக்கும், டெல்லியில் 104864 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.