வங்கிகளுக்கு கடனை திருப்பிச் செலுத்தும் அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்! குணசீலன் ராஜு

மலேசிய இந்திய காங்கிரசின் (MIC) மத்திய செயலவை உறுப்பினர் (CWC) குணசீலன் ராஜு

கோலாலம்பூர் ஜூலை 9-

தற்போதைய பொருளாதாரச் சவால்களை மலேசியர்கள் எதிர்கொள்ள வங்கிகளுக்கு கடனை திருப்பிச் செலுத்தும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என மலேசிய இந்திய காங்கிரசின் மத்திய செயலவை உறுப்பினர் குணசீலன் ராஜு வலியுறுத்தியுள்ளார்.

Covid-19 கிருமித்தொற்று தாக்கத்தின் காரணமாக நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு தளர்வுக்கு உட்பட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு அமலாக்கம் கண்டது. தற்போது மீட்பு நிலை நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு தொடரும் காலகட்டத்தில் மலேசியர்களுக்கு மிகப்பெரிய சமூகப் பொருளாதாரத் தாக்கம் ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.

புள்ளிவிவர துறையின் ஆய்வின்படி வேலையின்மை 5.5% ஆக அதிகரித்துள்ளது என்பதை காட்டுகின்றது. நடமாட்ட கட்டுப்பாட்டு அமல்படுத்தப்பட்டதிலிருந்து 8 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்லாயிரம் கணக்கான தொழிலாளர்களின் ஊதியமும் குறைக்கப்பட்டுள்ளது.

தற்போது சிறு வியாபாரங்கள் தொடங்கப்பட்டுள்ளன. கடனை திருப்பிச் செலுத்துவதற்கு கால அவகாசம் தேவை என்பதுதான் அனைவரின் கருத்தாக இருக்கின்றது….!

ஊதியம் பெறாத விடுப்பில் பலர் தத்தளித்து உள்ளனர். உத்தரவுகளைப் பின்பற்றாவிட்டால் வேலையை இழக்கும் சூழலும் உருவாகியுள்ளது. இதனால் மக்களின் வாழ்வாதாரங்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்று குணசீலன் சுட்டிக்காட்டினார்.

B40 பிரிவு மட்டுமின்றி M40 பிரிவினரும் நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு காலகட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். விமானப் போக்குவரத்து, சுற்றுலாத்துறை இதைச் சார்ந்த மற்ற இதர துறைகளிலும் வெகுவாகப் பாதிக்கப்பட்டது என்பதையும் அவர் நினைவுகூர்ந்தார்.

இத்தருணத்தில் தேசிய கூட்டணி அரசு முன்னெடுத்த செயல்திட்டங்கள் மக்களுக்குப் பேருதவியாக இருந்தன. குறிப்பாக வங்கிக் கடனை ஆறுமாதம் செலுத்த வேண்டாம் என அரசு கூறியது மக்களின் சுமையைக் குறைக்க உதவியது என்றார் குணசீலன்.
தற்போது பொருளாதாரத்தை மீட்கும் காலகட்டத்தில் நாம் இருந்தாலும், அனைத்துப் பகுதிகளிலும் புதிய விதிமுறைகளின் அடிப்படையில் மக்கள் தங்கள் வாழ்க்கையையும் பொருளாதாரத்தையும் சீரமைத்து வருகிறார்கள்.

இதற்குக் கால அவகாசம் தேவைப்படுகின்றது. எனவே இந்த ஆண்டு டிசம்பர் வரை வங்கி கடனை செலுத்த வேண்டாம் என்ற சலுகை மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என தாம் மத்திய அரசாங்கத்தையும் வங்கிகளையும் கேட்டுக் கொள்வதாக அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதனைச் செயல்படுத்தினால் நிச்சயமாக வேலையின்மை பிரச்சினைக்குத் தீர்வு காண்பது உட்பட தற்போதைய பொருளாதார நிலையை அடைய அரசாங்கத்திற்கு வழிவகைச் செய்யும் என குணசீலன் கூறினார்.

இந்த சலுகை வணிகத் துறைக்கும் வழங்கப்பட வேண்டுமென அவர் பரிந்துரைத்தார். இதனால் பொருளாதார நம்பகத்தன்மையும் வணிகங்களின் மறுசீரமைப்பையும் மிகவும் திறன்பட முன்னெடுக்க முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
நாட்டில் உள்ள வங்கி நிறுவனங்கள் நாட்டின் பொருளாதாரம் மற்றும் மக்களை மீட்க உதவுவதற்கும் அவர்களின் நீண்டகால வாடிக்கையாளர்களுக்கு ஆதரவு தரும் வகையிலும் இதனைச் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும் என குணசீலன் தெரிவித்தார்.