சபாநாயகர்கள் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்போம்! அன்வார் இப்ராஹிம்

ஜூலை 13ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டம் தொடங்குகின்றது. சபாநாயகர்கள் மாற்றம் குறித்து கடுமையான விவாதம் நடக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது....!!

போர்டிக்சன், ஜூலை 9-

நாடாளுமன்ற சபாநாயகர் தான்ஶ்ரீ முகமட் ஆரிஃப் மட் யூசுப், துணை சபாநாயகர் ஙா கோர் மிங் ஆகியோர் அதே பதவிகளில் நிலைநிறுத்தபடுவதை நம்பிக்கை கூட்டணி நாடாளுமன்ற கூட்டத்தில் முன்னெடுக்கும் என எதிர்கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.

ஜூலை 13ஆம் தேதி கூடும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் சபாநாயக,ர் துணை சபாநாயகர் மாற்றப்படுவது குறித்துப் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது. பதவி பரிமாற்றத்தை இயல்பானதாகக் கருதுபவர்கள் நாடாளுமன்ற வரலாற்றைப் புரிந்து கொள்ளாதவர்கள். நாடாளுமன்றத்தின் சபாநாயகர் மிக முக்கியமானவர் என அவர் சுட்டிக்காட்டினார்.

”தான்ஸ்ரீ ஆரிஃப் முன்னாள் நீதிபதி. இதுவரையில் அவர் தமது பணியைச் செவ்வனே ஆற்றியுள்ளார்” என்றார் அன்வார் இப்ராஹிம்.
அதோடு ”நாடாளுமன்ற சீர்திருத்தத்தின் முன்னோடி இல்லாத நடவடிக்கைகளை நாங்கள் எதிர்ப்போம்”. ”எனவே சபாநாயகர் துணை சபாநாயகர் இருவரையும் நாங்கள் கடுமையாகவும் உறுதியாகவும் பாதுகாப்போம்” என்று போர்டிக்சனில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அன்வார் இப்ராஹிம் மேற்கண்டவாறு கூறினார்.

புதிய சபாநாயகராகத் தேர்தல் ஆணையத்தின் தலைவர் அஸார் அஸிஸான் ஹருமும் துணைச் சபாநாயகராகப் பெங்கேராங் நாடாளுமன்ற உறுப்பினர் அஸாலினா ஒத்மான் ஆகியோர்களின் பெயர்களை பிரதமர் டான்ஶ்ரீ முகீடின் முன்வைத்துள்ளார்கள்.