டத்தோஸ்ரீ ஆறுமுகம் கடத்தல்: அரசியல்வாதி உட்பட 6 பேர் மீது குற்றச்சாட்டு

பெட்டாலிங் ஜெயா ஜூலை 9-

தொழிலதிபர் டத்தோஸ்ரீ ஆறுமுகத்தைக் கடத்தியது தொடர்பாக ஓர் அரசியல்வாதி உட்பட 6 பேர் மீது மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது. கடத்தப்பட்ட தொழிலதிபர் ரவாங்கில் இறந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

அஸாரி ஷாரோம் ஷாய்மி,56; முகமது துரை அப்துல்லா,52; ஷேக் இஸ்மாயில் ஷேக் ஹசன்,26; என்.விக்னேஸ்வரர், 28; வங்காளதேச ஆடவர் காசி நஸ்ரூல், 42; ஆகியோருக்கு எதிராக வியாழக்கிழமை ஜூலை 9ஆம் தேதி மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை வாசிக்கப்பட்டது. வாசிக்கப்பட்ட பின்னர் குற்றம்சாட்டப்பட்ட ஐவரும் தலையசைத்தனர்.

50 மில்லியன் சிங்கப்பூர் டாலர் (153 மில்லியன் மலேசிய ரிங்கிட்) பிணை பணம் கோரி மேம்பாட்டு நிறுவன உரிமையாளர் டத்தோஸ்ரீ ஆர் ஆறுமுகம் வயது 55 என்பவரை கடத்தியதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இவர்கள் இக்குற்றத்தை ஜூன் 10ஆம் தேதி காலை 10.30 மணிக்கு இங்குள்ள தாமான் கெஜிரானன் சென்ரல் ஸ்பின், பண்டார் ஸ்ரீ டாமன்சாராவில் புரிந்ததாகக் கூறப்பட்டது.

ஆறுமுகத்தை கடத்தியவர்கள் அவரை இந்த வீட்டில்தான் அடைத்து வைத்திருந்ததாகக் கூறப்படுகின்றது…

குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடத்தல் சட்டம் 1961 இன் பிரிவு 3 கீழ் கட்டாய மரணத் தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.. சிறை தண்டனை விதிக்கப்பட்டால் பிரம்படியும் வழங்கப்படும்.

இதற்கிடையில் ஆறாவது நபரான டத்தோ கே. ராமச்சந்திரன், மேற்குறிப்பிட்ட அனைவரையும் இந்தக் குற்றத்தில் ஈடுபடுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. ராமச்சந்திரன் 13ஆவது பொதுத்தேர்தலில் பிகேஆர் கட்சியின் சார்பில் பாத்தாங் காலி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டவர்.

அவர் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 109 இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டார். கடத்தல் சட்டம் 1961 இன் கீழ பிரிவு 3 உடன் சேர்த்து அவரது குற்றம் வாசிக்கப்பட்டது. அவர் கட்டாய மரணத் தண்டனை அல்லது ஆயுள் தண்டனையை எதிர் கொள்கின்றார். சிறை தண்டனை விதிக்கப்பட்டால் பிரம்படியும் வழங்கப்படும்.

கொலை செய்யப்பட்ட டத்தோஸ்ரீ ஆறுமுகத்தின் உடல் ஜூன் 27ஆம் தேதி காலை 9 மணிக்கு பெஸ்தாரி ஜெயாவில் கண்டெடுக்கப்பட்டது.