பெட்டாலிங் ஜெயா, ஜூலை 14-

இவ்வாண்டுக்கான யூபிஎஸ்ஆர் தேர்வு நடக்காது என கல்வி அமைச்சு அறிவித்துள்ள நிலையில், இந்திய மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டடு, மலேசியாவில் முதன்மை கல்வி நிலையமான ஶ்ரீ முருகன் (SMC), யூபிஎஸ்ஆர் மாணவர்களுக்கு இணையத் தேர்வை உருவாக்கியுள்ளது.

இதில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி அனைவரும் பங்கேற்கலாம். இது தொடர்பாக ஸ்ரீ முருகன் நிலையம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:-

யூ.பி.எஸ்.ஆர்: நம் மாணவர்களின் முதல் அரசாங்கத் தேர்வு கோவிட்19 பெருந்தொற்றினால் மலேசியக் கல்வி அமைச்சு, 2020ஆம் ஆண்டுக்கான யூபிஎஸ்ஆர் தேர்வை ரத்து செய்துள்ளது.

யூபிஎஸ்ஆர் தேர்வு ரத்து செய்யப்படாமல் இருந்தால், இந்த ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் 6ஆம் ஆண்டு மாணவர்களின் நடவடிக்கைகள் எவ்வாறாக இருந்திருக்கும்?

இப்போதைய காலக்கட்டத்தில் யூபிஎஸ்ஆர் தேர்வை முன்னோக்கி நம் மாணவர்கள் சுய கால அட்டவணையைப் பின்பற்றுதல், பாடங்களை மீள்பார்வை செய்தல், கடந்தாண்டு கேள்வித் தாட்கள், மாதிரி கேள்வித் தாட்கள், ஆயிரக்கணக்கானப் பயிற்சிக் கேள்விகள் ஆகியவற்றை செய்து தங்களை யூபிஎஸ்ஆர் தேர்வுக்குத் தயார் செய்திருப்பார்கள்.

மேற்கூறிய நடவடிக்கைகள் மூலமாக மாணவர்கள் தன்னம்பிக்கை, கட்டொழுங்கு, விடாமுயற்சி, நேரந்தவறாமை, திட்டமிடல், எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்தல் போன்ற முக்கிய திறன்களைப் பெறுவர். இம்மாதிரியான திறன்கள் தான் நம் மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு படிவம் 1 மற்றும் அவர்களது எதிர்காலத்திற்குப் பேருதவியாக இருக்கும்.

அதுமட்டுமன்றி, யூ.பி.எஸ்.ஆர் தேர்வானது, ஒரு குடும்பத்தின் கூட்டு முயற்சியாகவும் விளக்குகின்றது. 12 வயதில் நம் மாணவர்கள் எதிர்க்கொள்ளும் இந்த முதல் அரசாங்கத் தேர்வுக்குப் பெற்றோர்களின் பங்கு அளப்பரியது.

இந்தத் தேர்வு ஒரு குடும்பத்தில், பெற்றோர் மற்றும் பிள்ளைகளிடையே அன்பு, அரவணைப்பு, ஆதரவு ஆகியவற்றை மேம்படுத்துகிறது. பெற்றோர்களுக்காகச் சிறப்பாகப் படித்து சாதனைப் புரிய வேண்டும் என்கிற வேட்கையையும் நம் மாணவர்களிடையே யூபிஎஸ்ஆர் தேர்வு உருவாக்கம் செய்கிறது.

ஆகவே, யூபிஎஸ்ஆர் தேர்வானது, மாணவர்களின் கல்வி அடைவு நிலையைத் தீர்மாணிக்கும் கருவி மட்டும் அல்ல! மாறாக, அந்தத் தேர்வுக்காக நம் மாணவர்கள் மேற்கொள்ளும் தயார்நிலையும் மற்றும் பயிற்சிகளும்தான் அவர்களை இடைநிலைப்பள்ளியில் சிறந்து விளங்கி உயர்வடையச்செய்யும். தேர்வுக்காக முன்னெடுக்கும் பயிற்சிகள் யாவும் நம் மாணவர்கள்களின் கல்வி மற்றும் வாழ்வியல் திறன்களை வளப்படுத்தும்.

இதைக் கருத்தில் கொண்டு, அதிமுக்கியம் வாய்ந்த இந்த யூபிஎஸ்ஆர் தேர்வுக்குத் தயார் செய்வதன் வாயிலாகக் கிடைக்கப்பெறும் நன்மைகளிலிருந்து நம் மாணவர்கள் விடுபடாமலிருக்க ஶ்ரீ முருகன் நிலையம் நாடு தழுவிய நிலையில் இந்திய மாணவர்களுக்கு யூபிஎஸ்ஆர் இறுதி தேர்வினை ‘ஒன்லைன்’ முறையில் இலவசமாக நடத்தவுள்ளது.

செப்டம்பர் 1 முதல் 8 வரை நடைபெறும் இந்த யூபிஎஸ்ஆர் இறுதி தேர்வுக்கு மாணவர்களைத் தயார்ப்படுத்த 1,000 பயிற்சிக் கேள்விகள் மற்றும் 2 மாதிரி தேர்வுகள் நடத்தப்படவுள்ளன. இவையாவும் ஶ்ரீ முருகன் நிலையத்தின் மின் வழி கற்றல் இணைய முகப்பு “பிரம்மாஸ்திரா”வில் இடம்பெறும் (SMC Online Learning Portal – Brahmastra).

யூ.பி.எஸ்.ஆர் இறுதி தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்படவுள்ளன. இத்தேர்வினில் பங்குப்பெற தமிழ்ப்பள்ளி மற்றும் தேசியப் பள்ளிகளில் பயிலும் ஆறாம் ஆண்டு இந்திய மாணவர்கள் அழைக்கப்படுகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேல் விபரங்களுக்கு:

(ஶ்ரீ முருகன் நிலைய முகநூல்):

https://www.facebook.com/srimurugancentre.officialpage/

பதிவுக்கு (ஶ்ரீ முருகன் நிலைய அகப்பக்கம்):

www.smc.com.my