பொது பல்கலைக்கழக மாணவர்களுக்கு 15% கட்டணக் குறைப்பு! உயர்கல்வி அமைச்சர்

கோலாலம்பூர் ஜூலை 15-

பொது உயர் கல்விக் கூடங்களில் உள்ள மாணவர்கள் தங்களின் விடுதி, நிர்வாக மற்றும் செயல்பாட்டுக் கட்டணங்களுக்கு 15 விழுக்காடு வரை குறைப்பு வழங்கப்படும் என்று உயர்கல்வி அமைச்சர் டத்தோ டாக்டர் நொராய்னி அமாட் கூறியுள்ளார்.

2019/2020 கல்வி அமர்வின் இரண்டாம் தவணையில் (Second Semester) இருப்பவர்களுக்கும் இந்த தள்ளுபடி பொருந்தும் என்றும் அவர் கூறினார்.

இது மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் சுமைகளைக் குறைக்க உதவும். குறிப்பாக covid-19 நோய்த் தொற்றின்போது பாதிப்புக்குள்ளானர்களுக்கு இது நிச்சயம் உதவும் என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் கருத்துக்களைப் பெற்ற பின்னர் பல்கலைக்கழக கட்டணத்தில் கழிவு வழங்குவது குறித்து தமது அமைச்சு நிதி அமைச்சுடன் கலந்துரையாடியதாக பாரிட் சூலூங் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் மேற்கண்டவாறு கூறினார்.

”அந்தக் கலந்துரையாடலில் இருந்து பொது பல்கலைக்கழகங்களில் விடுதி நிர்வாக மற்றும் செயல்பாட்டுக் கட்டணங்களை 15 விழுக்காடு வரை குறைக்க அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.”

”அரசு மற்றும் பொது பல்கலைக்கழகங்களின் நிதி திறனைக் கணக்கில் கொண்ட பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டது”. என நாடாளுமன்றத்தின் கேள்வி பதிலின் போது அவர் பதிலளித்தார்.

”இதனால் நாடு முழுவதும் உள்ள பொது பல்கலைக்கழகங்களில் பயிலும் சுமார் 523,318 மாணவர்கள் பயனடைவார்கள்” என்று எதிர்பார்க்கப்படுவதாக நொராய்னி தெரிவித்தார்.