பாலியல் புகார்: விரிவுரையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது! – மலாயாப் பல்கலைக்கழகம்

கோலாலம்பூர் ஜூலை 16-

கடந்த ஆண்டு ஒரு மாணவி முன்வைத்த பாலியல் துன்புறுத்தல் புகாரைத் தொடர்ந்து மூத்த விரிவுரையாளர் மீது மலாயாப் பல்கலைக்கழகம் ஒழுங்கு நடவடிக்கையை எடுத்துள்ளது.

அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அப்துல் ரஹீம் ரஸிம், அந்த விரிவுரையாளர் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறினார்.

பல்கலைக்கழகம் அவரை இடைநீக்கம் செய்து இருந்தாலும், அது அறிவிக்கப்படவில்லை. ஏனெனில் மலாயாப் பல்கலைக்கழக அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தரப்பினரின் ரகசியத் தன்மை மற்றும் தனி உரிமைகளைப் பாதுகாக்கக் கடமைப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.

கடந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி பாலியல் துன்புறுத்தல் புகார் தொடர்பாகப் பல்கலைக்கழகம் திருப்திகரமான பதில் தரவில்லை என்பதை முன்னிறுத்திப் பாதிக்கப்பட்ட பெண் நேற்று போலீஸ் புகார் செய்திருந்தார். அது குறித்து பதில் அளித்த ரஹீம் மேற்கண்டவாறு கூறினார்.

போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் செய்தபோது…

பாதிக்கப்பட்ட பெண் மூன்றாம் தவணை மாணவி. மூத்த விரிவுரையாளர் ஒருவர் கடந்த ஆண்டு ஜூன் மூன்றாம் தேதி தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாகக் கூறினார்.

இது குறித்து வருத்தம் தெரிவித்த ரஹீம், ”மாணவர்களின் மன உளைச்சலை குறைக்கத் தேவையான நடவடிக்கை முன்னெடுக்கப்படும்” என நம்பிக்கை அளித்தார்.

”மலாயாப் பல்கலைக்கழகம் இதுபோன்ற விவகாரங்களைத் தீவிரமாக எடுத்துக் கொள்கிறது.” ”பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க பல்வேறு திட்டங்களையும் முயற்சிகளையும் நாங்கள் செயல்படுத்தி உள்ளோம்” என்றார் அவர்.

இந்த நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றார் அவர்.