முன்னாள் மனைவியைக் கொலை செய்து போலீசை அழைத்த கணவன்!

ஜோகூர் பாரு ஜூலை 16-

தாமான் ஹேசான் ஜெயாவில் உள்ள வீட்டில் 27 வயது முன்னாள் மனைவியைக் கொலை செய்ததாக 32 வயது நபர் கைது செய்யப்பட்டார்.

புதன்கிழமை (ஜூலை 15) பிற்பகல் 3.20 மணி அளவில் போலீசாரை தொடர்பு கொண்ட அந்நபர், முன்னாள் மனைவியைக் கொலை செய்ததாகக் கூறியுள்ளார் என ஸ்ரீ அலாம் துணை ஓசிபிடி இஸ்மாயில் டோல்லா தெரிவித்தார்.

”அந்த பெண்ணின் முன்னாள் கணவர் போலீசை வீட்டிற்கு அழைத்தார். அவர் அந்தப் பெண்மணியைக் கொலை செய்து விட்டதாகக் கூறினார்” என்றார் அவர்.

சம்பவம் நடந்த இடத்தில் எந்த ஆயுதமும் கண்டுபிடிக்கப்படவில்லை. பிரேதப் பரிசோதனைக்காகச் சுல்தானா அமீனா மருத்துவமனைக்குக் கொலை செய்யப்பட்ட பெண்மணியின் உடல் கொண்டு செல்லப்பட்டது என வியாழக்கிழமை (ஜூலை 16) ஓர் அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

மரணத்துக்கான காரணத்தைக் கண்டறியப் பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காக போலீஸார் தற்போது காத்திருக்கிறார்கள்.
கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். கொலைக்கான தண்டனை சட்டத்தின் பிரிவு 302 இன கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக இஸ்மாயில் கூறினார்.