தெலுக் இந்தான் ஜூலை 16-

இன்று காலை தங்களது தமிழ்ப் பள்ளிக்கூடத்திற்குச் சென்று கொண்டிருக்கும் வேளையில் மூன்று தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் பயணித்த வாகனம் விபத்துள்ளானது.

இருப்பினும் கடமை தவறாமல் பள்ளிக்குச் சென்று தங்களின் கடமையை நிறைவேற்றி உள்ளார்கள். இதில் மிக முக்கியமான விவகாரம் என்னவென்றால் அவர்கள் பயின்று தரும் தமிழ்ப் பள்ளியில் ஒரே ஒரு மாணவன் மட்டுமே படிக்கிறான்.

தெலுக் இந்தான் சுங்கை தீமா தோட்டத் தமிழ்ப்பள்ளி இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குச் செயல்படும் என்பது தெரியாத நிலையிலும் அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள்.

சுங்கை தீமா தோட்டத் தமிப்பள்ளியில் பயிலும் ஒரே ஒரு மாணவனுடன் ஆசிரியர்கள்

ஆசிரியர் புவனேஸ்வரி கணேசன், சிவபாலன் பிள்ளை முனியன், லாவண்யா ராமச்சந்திரன் ஆகியோர் ஆயீர் தாவாரிலிருந்து காலையில் பள்ளிக்குச் சென்றபோது இவர்களது வாகனம் விபத்துக்குள்ளானது. கை கால் பகுதிகளில் காயம் ஏற்பட்டாலும் அதனைப் பொருட்படுத்தாமல் பள்ளிக்குச் சென்று தங்களின் பணியை மேற்கொண்டுள்ளனர்.

ஒவ்வொரு நாளும் 172 கிலோமீட்டர் தூரம் கடந்து இவர்கள் பள்ளிக்குச் செல்கிறார்கள். மோசமான சாலையைக் கடந்து செல்வது இவர்களுக்குப் பெரிய சுமையாக இருக்கின்றது. மிகக் குறிப்பாக இந்த தோட்டத் தமிழ்ப்பள்ளியில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உட்பட 6 பேர் பணியாற்றுகிறார்கள்.

ஆசிர்யர்கள் பயணித்த வாகனம்

ஆசிரியர்களின் மூவர் அதே மாவட்டத்திலிருந்து வருகிறார்கள். 1937ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இப்பள்ளியில் ஆரம்பத்தில் அதிகமான மாணவர்கள் பயின்றார்கள்.

தோட்டத்தை விட்டு காலப்போக்கில் பலர் வெளியேறிய நிலையில் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது. கடந்த ஆண்டு 7 மாணவர்கள் பயின்ற நிலையில் இவ்வாண்டு ஒரே ஒரு மாணவன் மட்டுமே பயில்கிறான்.

இப்பள்ளியில் எலிகள் தொல்லையால் ஆசிரியர்கள் மாணவர்கள் ஆகியோரின் உணவுகளை எங்கும் வைக்க முடியவில்லை. அதிலும் குறிப்பாக குழாயில் ஆற்று நீர் தான் வருகிறது.

இவ்வளவு இடையூறுகளுக்கு மத்தியிலும் அப்பள்ளியின் ஆசிரியர்கள் தொடர்ந்து சேவையாற்றி வருகின்றார்கள். இப்பள்ளிக்கு எப்போது விடிவுகாலம் பிறக்குமென்பது இன்னமும் விடை தெரியாத கேள்வியாகவே இருக்கின்றது.