ஆஸ்ட்ரோ விண்மீன் அலைவரிசையில் கடந்த நான்கு வாரங்களாக ஒளியேறிய கள்வனைக் கண்டுபிடி தொடர் நாடகம் உள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றிருக்கிறது என்றால் அது மிகையாகாது.

இம்மாதிரியான படைப்புகளுக்கு முன்னுரிமை வழங்கும் ஆஸ்ட்ரோவின் இந்திய அலைவரிசை வியாபாரம் (விண்மீன்) மற்றும் மின்னியல் உதவித் துணைத் தலைவர் குப்புசாமி சந்திரகாஸ் மற்றும் அவர்தாம் குழுவினர்களுக்கு முதலில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆஸ்ட்ரோ விண்மீன் அதிகாரிகளுடன் கள்வனைக் கண்டுபிடி குழுவினர்

ஒவ்வொரு படைப்பும் அதன் தரத்தை வைத்தே மதிப்பிடப்படுகிறது. அந்த வகையில் கள்வனைக் கண்டுபிடி ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற ஒரு தரமான படைப்பு என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. ஓர் அமானுஷ்ய கதையின் ஊடே, காதல் , பாசம் , வன்மம், குடும்ப உறவுகளின் சிக்கல் எனப் பல வகையில் கதையில் தோரணங்களைக் கட்டியுள்ளார் இயக்குநர் கார்த்திக் ஷாமலன்.

உள்நாட்டுக் கலையுலகில் தொடர்ந்து தரமான படைப்புகளை வழங்கி வரும் கார்த்திக் ஷாமலனின் கனவு படைப்புகளில் ஒன்றுதான் கள்வனைக் கண்டுபிடி. அமேசோன், நெட்ஃபிலிக்ஸ் போன்ற ஒடிடி தளங்களில் இடம்பெறக்கூடிய தகுதியைக் கொண்ட ஓர் உள்ளூர் படைப்பு என்று தைரியமாகச் சொல்லலாம்.

இயக்குநர் கார்த்திக் ஷாமலன்

இந்த விமர்சனத்தில் கள்வனைக் கண்டுப்பிடியின் கதை குறித்து மூச்சு விட்டால் அது அந்த படைப்புக்குச் செய்யும் நியாயமாக இருக்காது. 27 தொடர்களைக் கொண்ட இந்த நாடகத்தில் முதல் நாள் தொடங்கி ரசிகர்களின் மனதில் ஒரு வித எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் லாகவத்தை கார்த்திக் ஷாமலன் அறிந்து வைத்திருக்கிறார்.

கதையில் அவ்வப்போது ஏற்படும் திடீர் திருப்பங்களின் வழி , அந்த படைப்பின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்கிறார். கதைக்குப் பொருத்தமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்தாலே ஒரு படைப்பு பாதியளவு வெற்றி பெற்று விடுகிறது. இந்த இடத்திலும் கார்த்திக் ஷாமலன் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளார்.

கதையின் நாயகன் லிங்கேஸ்வரனும், நாயகி பாஷினி சிவகுமாரும் ஒருவரை ஒருவர் மிஞ்ச வேண்டும் என்ற நோக்கத்தில் போட்டிப் போட்டுக் கொண்டு நடிப்பை வெளிப்படுத்துகின்றனர்.

லிங்கேஸ்வரன்

லிங்கேஸ்வரன் ஒரு திறமையான நடிகர் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இரண்டு வெவ்வேறு கால கட்டங்களில் நடக்கும் கதையில், ஒரு காதலனாக, மகனாகத் தோன்றும் லிங்கேஸ்வரன் குறைவான வசனங்களுடன் தனது உடல் மொழியின் மூலம் நடிப்பை நம்மிடம் கடத்துகிறார்.

கதையின் நாயகி பாஷினி சில காட்சிகளில், ஒரே டேக்கில் தனது நடிப்பால் அசத்தியுள்ளார். மலேசியக் கலையுலகிற்கு புதிய நம்பிக்கையையும் விதைத்துள்ளார். இவர்களுடன் கதையின் போக்கிற்கு மிகப் பெரும் பங்காற்றியுள்ள துணை நடிகர்களையும் குறிப்பிட வேண்டும்.

பாசினி

இவர்களுடன் ஆமோனாக பிரவேசிக்கும் மகேன் விகடகவி, சத்துரு சாமியாராக கே.எஸ் மணியம், போலீஸ் அதிகாரி நபிலாக பென்ஜி, பரமாக சங்க பாலன், அனிலாக, ரவின் ராவ் , தேவனாக ராஜ் கணேஷ், தானியாவின் கணவனாக ஆர். மோகன ராஜ் என அனைவரும் தத்தம் பாத்திரங்களைச் சிறப்பாகச் செய்துள்ளனர்.

அதிலும் “நான் யாரு “என கேள்வி கேட்டே பாஷினியிடம் எரிச்சலைச் சம்பாதித்தாலும், மோகன ராஜ் தனித்தே தெரிகிறார். முதல் முறையாகத் தோன்றும் ராஜ் கணேஷ் வித்தியாசமான உடல் மொழியில் ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்க முயல்கிறார். எனினும் அவரின் அந்த உடல் மொழியே அவரின் நடிப்பிற்குப் பலவீனத்தைத் தருகிறது. இருப்பினும் முதல் முயற்சியில் அவரை கைக் குலுக்கி வரவேற்கலாம். இவர்களுக்கு மத்தியில் ஆமோனாக வரும் மகேன் விகடகவிக்குத் தனது வித்தியாசமான பாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்.

கார்த்திக் ஷாமலனின் இந்த கனவு படைப்புக்கு மிகப் பெரிய பலம் அவரின் தொழில்நுட்ப குழு. குறிப்பாக ஒளிப்பதிவாளர் ஜி.வி. கதிர் நம்பிக்கை தரும் நட்சத்திரமாக விளங்குகிறார். படைப்பின் தன்மையை ஆரம்பம் முதலே தனது ஒளிப்பதிவில் இருக்கும் வண்ண கலவையின் மூலம் இது எத்தகையைப் படைப்பு என்பதைக் கதிர் நம்மிடம் உணர்த்துகிறார்.

ஒளிப்பாதிவாளர் ஜி.வி.கதிர் (நடுவில்)

பின்னணி இசையில் ஷமேசன் மணிமாறன் ,மீண்டும் கார்த்திக் ஷாமினுக்குத் தோள் கொடுத்து நிற்கிறார். குறிப்பாக திருதேவன் மெய்ஞானம் வரும் காட்சிகளில் பின்னணி இசையைக் குறிப்பிடலாம். எனினும் படத்தில் வசனங்களை நேரடியாக ஒலிப்பதிவு செய்திருப்பது மட்டுமே சில இடங்களில் பலவீனமாக அமைகிறது. சில இடங்களில் வசனம் தெளிவாக விளங்காத காரணத்தின் காரணமாக சப்டைட்டில் கொண்டு தெரிந்து கொள்ள வேண்டிய நெருடல் ஏற்படுகிறது.

எது எப்படி இருப்பினும் உள்ளூர் படைப்புகளில் தரத்தில் உயர்த்து நிற்கும் கள்வனைக் கண்டுப்பிடியை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது அநேகன்

– அநேகன் விமர்சனக் குழு