கோலாலம்பூர், ஆக. 7-

மலாய்க்காரர்களுக்காக புதிய கட்சியைத் தாம் தொடங்கவிருப்பதாக அது அக்கட்சி சுயாதீனமான கட்சியென முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் அறிவித்துள்ளார்.

பெர்சத்து கட்சியின் அசல் போராட்டத்தைத் தொடர, நாங்கள் சுதந்திரமாகச் செயல்படவேண்டும் அல்லது புதிய கட்சியைத் தோற்றுவிக்க வேண்டும் என மகாதீர் குறிப்பிட்டார்.

அதோடு இன்னனும் பெயரிடப்படாத இக்கட்சி தேசியக் கூட்டணி (PN), நம்பிக்கைக் கூட்டணி (PH)ஆகியவற்றுடன் இணைந்து செயல்படாது. நாங்கள் தனித்துச் செயல்படுவோம் என மகாதீர் கூறியுள்ளார்.

வாரிசானுடன் இணைந்து செயல்படுவதற்கு வாய்ப்பு உள்ளதா எனச் செய்தியாளர்கள் கேட்டபோது, நாங்கள் யாருக்கும் கட்டுப்படவில்லை என்றார். 

புதிய கட்சியின் நிலைப்பாட்டை மேலும் விளக்கிய டாக்டர் மகாதீர், “ஊழல் மற்றும் அரசியலில் ஊழல் தலைவர்கள் ஆகியவற்றை ஒழிப்பதே தனது குறிக்கோள்” என்றும், புதிய அரசியல் தளத்திற்கான போராட்டம் “பணத்தின் அடிப்படையில் அல்ல, ஆற்றலை அடிப்படையாகக் கொண்டது” என்றும் வலியுறுத்தினார்.

“உறுப்பினர்கள் இந்த போராட்டத்தைக் கையிலெடுக்க வேண்டும்.

“கட்சியில் அல்லது அரசாங்கத்தில் ஒரு குறிப்பிட்ட பதவிக்கு யாருக்கும் எந்த உத்தரவாதமும் இல்லை,” என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

புதிய கட்சியின் முதன்மைத் தலைவராக துன் டாக்டர் மகாதீரும் தலைவராக அவரது மகன் முக்ரீஸ் மகாதீரும் முன்னின்று வழிநடத்துவார்கள்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் பெர்சத்து கட்சியின் முன்னாள் இயக்குநர் மர்சூகி யாயா, குபாங் பாசு நாடாளுமன்ற உறுப்பினர் அமிருடின் அம்சா, ஶ்ரீ காடிங் நாடாளுமன்ற உறுப்பினர் ஷாருடின் மட் சாலே ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.
மூவார் நாடாளுமன்ற உறுப்பினர், சையத் சாதிக் சையத் அப்துல் ரஹ்மான் இதில் கலந்து கொள்ளவில்லை. அவர் குடும்ப அலுவல் காரணமாக ஜொகூரில் இருப்பதாகக் கூறப்பட்டது.

மலாய்க்காரர் அல்லாதவர்களின் உறுப்பியம் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றாலும், மலேசியாவில் உள்ள அனைத்து இனத்தவர்களின் நலன்களையும் கட்சி கவனித்துக்கொள்ளும் என்று டாக்டர் மகாதீர் விளக்கினார்.