கோலாலம்பூர் ஆக. 7-

மலேசிய இந்தியர்களின் ஏற்றமிகு எதிர்காலத்திற்காக உழைக்கும் ஒரே கட்சியாக மலேசிய இந்தியக் காங்கிரஸ் (மஇகா) விளங்குகின்றது. அதனால் அடுத்த பொதுத் தேர்தலில் மஇகா வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வது அனைவரது கடமையாகும் என பரிவுமிக்க சமூக நல இயக்கத்தின் தலைவர் டத்தோஶ்ரீ ரமேஷ் ராவ் கூறியிருக்கின்றார்

இது குறித்து தமது அதிகாரப்பூர்வ யூடியூப் அலைவரிசையில் அவர் ஒரு காணொளிப் பதிவையும் வெளியிட்டுள்ளார்.

மலேசியா சுதந்திரம் அடைவதற்கு முன்னதாகவே மலேசிய இந்தியர்களின் வாழ்வாதாரத்திற்கு வித்திட்ட கட்சி மஇகா. சுதந்திரம் கிடைத்ததற்கு பிறகுகூட இந்தியர்களின் அடிப்படை பிரச்சனை குறித்துத் தொடர்ந்து அவர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இந்நாட்டில் மலேசிய இந்தியர்களின் அடையாளமாக இருக்கும் தமிழ்ப்பள்ளிகள் ஆலயங்களின் மேம்பாட்டிற்கு அவர்களின் பங்களிப்பு அளப்பரியது என மலாய்க்காரர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் பெற்ற தொழிலதிபருமான ரமேஷ் மேற்கண்டவாறு கூறினார்.

1ஆவது பொதுத் தேர்தலில் இந்தியர்கள் ஏமாற்றப்பட்டார்கள். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் தோல்வி கண்டது. ஆனால் எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி மலேசிய இந்தியர்களின் உரிமைக்காக மஇகா தொடர்ந்து குரல் எழுப்பி வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.

மிக முக்கியமாக மஇகாவின் முன்னாள் தலைவர் துன் சாமிவேலு தொடங்கி தற்போது வரை அக்கட்சியில் இருக்கும் முதன்மை தலைவர்கள் யாருமே ஊழல் சார்ந்த வழக்குகளைச் சந்திக்கவில்லை என்பதையும் அவர் நினைவு கூர்ந்தார்.

அக்கட்சியின் மீது குறை சொல்லி அரசியல் நடத்தினார்கள். ஆனால் உண்மைக்குப் புறம்பான செய்திகளைக் குறை கூறியவர்களால் இன்றுவரை நிரூபிக்க முடியவில்லை. மஇகாவை சார்ந்த தலைவர்கள் சமுதாய பணத்தைத் திருடினார்கள் என்றால் நீங்கள் அதிகாரத்திலிருந்தபோது அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்ற கேள்வியையும் அவர் முன்வைத்தார்.