குவாந்தான், ஆக. 10-

தெற்கிழகாசியாவில் மிகவும் பழமையான நாளிதழாக விளங்கிய தமிழ் நேசனின் முன்னாள் நிருபர் வி. தவசேகரன் இன்று காலமானார்.

67 வயதான தவசேகரன் இன்று அதிகாலை 2 மணியளவில் பண்டார் இண்டரா மகோதா மலேசிய இஸ்லாமிக் பல்கலைகழக மருத்துவமனையில் காலமானார்.

கிளந்தான், திரங்கானு ஆகிய மாநிலங்களில் நடக்கும் முக்கியச் செய்திகளை தொகுத்து வழங்கியதில் தவசேகரன் மிகவும் பிரபலமானவர். இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகாலமாக வயிற்று வலியால் அவர் அவதிப்பட்டு வந்தார். பின்னர் அது புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.

அவரது மகன் 38 வயதான பக்கியா, 2014 முதல் மூன்று அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டதாகவும், இங்குள்ள தெங்கு அம்புவான் அப்சான் மருத்துவமனையிலும் கோலாலம்பூர் மருத்துவமனையிலும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார்.

“அவரது கட்டிகள் அனைத்தும் அகற்றப்பட்டதாக மருத்துவர் உறுதிப்படுத்தியதால், அவர் நலமாக இருப்பதாக குடும்பத்தினர் நினைத்தார்கள், ஆனால் கடந்த மாதம் அவரது நிலை மோசமடைந்தது. திடமான உணவை உட்கொள்ள முடியாததால், உணவுக் குழாயை நம்பியிருந்ததால், அவர் சாப்பிடுவதில் சிரமங்களை எதிர்கொண்டார்.

“அவர் இந்தியச் சமூகத்திற்கும் தமிழ் மொழிக்கும் பங்களித்தார். பகாங்கில் உள்ள இந்தியச் சமூகத்தின் அன்றாட போராட்டங்களைப் பத்திரிகை மூலம் அவர் அம்பலப்படுத்தினார். அவரது மரணம் சமூகத்திற்கு மிகப்பெரிய இழப்பாகும்” என்று அவர் கூறினார்.

2010 ல் தனது மனைவி கே.சில்வமலரை அவர் இழந்தார். இந்நிலையில் தவசேகரன் உடல் இன்று மாலை 4 மணியளவில் ஜலான் புக்கிட் மின்சுடலையில் தகனம் செய்யப்பட்டது.