திருப்பதி, ஆக. 10-

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (டி.டி.டி) பணியாற்றும் 743 ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் உயர் அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

இதில் திருமலையில் ஏழுமலையான் கோயிலில் பணியாற்றும் சில அர்ச்சகர்களுக்கும் கொரோனா வந்திருப்பதை அதிகாரி உறுதி செய்தார். பாதிக்கப்பட்ட 743 பேரில், மூன்று ஊழியர்கள் தொற்றுநோயால் இதுவரை இறந்துவிட்டார்கள்.

சுமார் 402 பேர் இதுவரை தொற்றுநோயிலிருந்து மீண்டுள்ளனர், 338 பேர் இங்குள்ள பல்வேறு கொவிட் பராமரிப்பு வசதிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

திருப்பதி திருமலை தேவஸ்தானத்தால் நிர்வகிக்கப்படும் திருமலையில் உள்ள புகழ்பெற்ற பகவான் வெங்கடேஸ்வரர் கோயில், கொரோனா வைரஸால் தொற்று பரவியதன் விதிக்கப்பட்ட லாக்டவுனால் மூடப்பட்டிருந்தது.

இரண்டரை மாதங்களுக்குப் பின்னர் ஜூன் 11 ஆம் தேதி மீண்டும் பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டது. மத்திய அரசு அறிவித்த தளர்வுகளை ஏற்றுத் திருப்பதி கோயிலை ஆந்திர அரசு திறந்தது. ஆனால் அதன்பின் எதிர்பாராத விதமாக ஆந்திராவில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவியது.