கோலாலம்பூர் ஆகஸ்ட் 14-

மலேசிய இந்தியக் காங்கிரஸ் (மஇகா) அனைத்து மக்களின் நம்பிக்கை பெற்ற கட்சியாக உருமாற்ற அக்கட்சியின் கிளைகளில் மிகப்பெரிய சீர்திருத்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் தான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

தேசிய நிலையில் மலேசிய இந்தியக் காங்கிரஸ் சிறப்பாகச் செயல்படும் நிலையில் கிளைகளிலும் அதன் நடவடிக்கையை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கையை முடக்கிவிடப் படுவதாக அவர் தெரிவித்தார்.

”நான் பலமுறை கூறிவிட்டேன். மஇகா சாதி கட்சி அல்ல. இங்கு அனைவருக்கும் வாய்ப்பு உண்டு” ”கடந்த காலங்களில் மலேசிய இந்தியக் காங்கிரசின் கிளைகளில் அதிகமான குடும்ப உறுப்பினர்கள் இருந்தனர்”. ”தற்போது சம்பந்தப்பட்ட கிளைகளில் அங்கே உள்ள உறுப்பினர்களை இணைக்க வேண்டும். குறைந்தது 100 வாக்காளர்களை அடையாளம் காணவேண்டும் என்ற நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது” என்று அவர் விளக்கினார்.

கடந்த காலத்தைப் போல் கிளை தலைவர்கள் அரசர்களாகச் செயல்பட முடியாது. மக்களுக்காகச் செயலாற்றக் கூடியவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும் என டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார். கிளைகளில் உள்ள மக்களுக்கு முதலில் தலைவர் யார் என்பது தெரிய வேண்டும் என்றார்.

தொடர்ந்து பேசியவர், கிளைகளில் முன்னெடுக்கப்படும் சீர்திருத்தம் புதிய கிளைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும். அதோடு அதிகமான இளைஞர்களைக் கட்சிக்குக் கொண்டு வரவும் அது வழிவகுக்கும். அதுமட்டுமின்றி மஇகாவிற்கு அது புதிய தோற்றத்தை வழங்கும் என மத்திய செயலவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தான்ஶ்ரீ விக்னேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்தார்.