பினாங்கு  ஆகஸ்ட்  14-

பினாங்கு மாநிலத்தின் தீவுப் பிரதேசத்திலிருந்து பெரு நிலத்திற்கும், இதே போன்று பெரு நிலத்திலிருந்து தீவுப் பிரதேசத்திற்கும் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பயணிகளுக்கான பெர்ரி படகுச் சேவை,  நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் அவல நிலையால், பயணிகள் பரவலாக அதிருப்தியடைந்துள்ளனர்.

பெர்ரி படகுக்காக தினந்தோறும் வெகு நேரமாக காத்திருக்கும் அவலம், பெரும்பாலான பயணிகளின் பொறுமையை சோதிக்கும் அளவுக்கு மோசமடைந்திருப்பது தொடர் கதையாகி வருவதால், இந்த விவகாரத்தில் விடிவு காலம் எப்போது என்று பலர் கேள்வி எழுப்புகின்ற நிலைமை தலைதூக்கியிருக்கிறது.

பினாங்கு துறைமுக  வாரியத்தின் கீழ்  இயங்கி வரும், பெர்ரி படகுச் சேவை நிர்வாகத்தினர், பயணிகள் எதிர்கொள்ளும்
அவதியை ஒரு பொருட்டாகக் கருதாமல், தங்கள் பாணியிலேயே மெத்தனமாகச் செயல்படுவதற்கு முற்றுப்புள்ளி வைத்து, பயணிகளின் தேவைக்கேற்றவாறு  சேவைத் தரத்தை மேம்படுத்துவதில் முனைப்பு காட்ட வேண்டுமென்று, பினாங்கு தஞ்சோங் தமிழ் முஸ்லீம் சங்கத் தலைவர் நசீர் முகைதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கும் மேலாக, பினாங்கில் செயல்பட்டு வரும்  பெர்ரி படகுச் சேவையில், எவ்வித முன்னேற்றமும் காணப்படாத நிலையில், பின்னடைவே நீடித்து வரும் பலவீனம், உள்ளூர்வாசிகளை மட்டுமின்றி, சுற்றுப் பயணிகளையும் முகம் சுளிக்க வைத்திருக்கும்  அவலம், இனியும் தொடரக் கூடாது என்று நசீர் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாளொன்றுக்கு ஓரிரு படகுகளின்  சேவையை மட்டுமே வழங்கி வரும் பெர்ரி  படகுத் துறை வாரியப் பொறுப்பாளர்கள்,
நீண்ட வரிசையாக அணிவகுத்து காத்து நிற்கும் வாகனமோட்டிகள் எதிர்கொள்ளும் அல்லலை கருத்தில் கொண்டு, மாற்றத்திற்கு வழி காணும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதே, காலத்திற்கேற்ற மாறுதலுக்கான சிறந்த வழி என்று நசீர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அனுதினமும் 45 நிமிடத்திலிருந்து  1 மணி நேரம் வரையில் பயணிகளின் காத்திருப்பு என்பது, எல்லை மீறும் கொடுமை என்றும் வர்ணித்த நசீர், இந்த அவலத்திற்கு தகுந்த மாற்றம் காண வேண்டுமானால், பெர்ரிபடகுச் சேவையின் பொறுப்பை மாநில அரசாங்கத்திடமே ஒப்படைப்பதற்கு மத்திய அரசு முன் வருவதே சரியான தீர்வாக அமையுமென்றும், இந்த விவகாரத்தில் பெரும் கொந்தளிப்புடன் தத்தளித்து வரும் பயணிகளின் அல்லலை, சம்பந்தப்பட்ட தரப்பினர் சீர்தூக்கிப் பார்க்க வேண்டுமென்றும் கருத்துரைத்துள்ளார்.

  நீண்ட காலமாகவே தொடர் கதையாக நிகழ்ந்து வரும் இந்தப் பிரச்சனையால், எண்ணற்றப் பயணிகளின் அவதியும் அல்லலும் நித்தமும் சூழ்வது வேதனையானது  என்பதை, மத்திய அரசு தரப்பினர் உணருகின்ற காலம் வருமாயின், இந்த விவகாரத்தில் நல்லதொரு மாற்றம் பிறப்பது திண்ணமென்றும், இதனை கருத்திற் கொண்டு பல்வேறு தரப்பினரும் பெர்ரி படகுச்  சேவையின் தர மேம்பாட்டிற்கு ஒருமித்த குரல் எழுப்ப வேண்டுமென்று, நசீர் தனது ஆதங்கத்தை முன் வைத்துள்ளார்.