சென்னை, ஆக. 24-
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பி.யின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்ப வேண்டாம் என அவரது மகன் சரண் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புகழ்பெற்ற சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த 5ஆம் தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சில நாட்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. இதனால் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எஸ்.பி.பி.யின் உடல்நிலை குறித்து விளக்கத்தை அவரது மகன் சரண் கொடுத்து வந்தார்.

ஆனால் கடந்த சில தினங்களாக எஸ்.பி.பி உடல்நிலை குறித்து சரண் எந்தவித தகவலும் தெரிவிக்காமல் இருந்தார். இதனால் ரசிகர்கள் கவலை அடைந்தனர். தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் எஸ்.பி.பி உடல்நலம் குறித்து கேட்டு வந்தனர்.

இந்த விவகாரத்தில் எஸ்.பி. சரண், மக்கள்தொடர்பு அதிகாரி நிகில் முருகன் பெயரில் பகிரப்பட்ட குறுஞ்செய்தியில் “எனது தந்தைக்காக தொடர்ந்து ஆதரவு தெரிவித்து பிரார்த்தனை செய்து வருபவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது தந்தை நலமுடன் இருக்கிறார். அவரது கொரோனா பரிசோதனை முடிவு நெகட்டிவ் ஆக வந்துள்ளது. மேற்கொண்டு தகவல்களை உங்களுக்கு தொடர்ந்து பகிர்கிறேன்” என்று கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள எஸ்.பி.பி சரண், “எப்போதும் மருத்துவர்களிடம் கலந்து ஆலோசித்த பின்னர், தந்தையின் உடல்நலம் பற்றி வீடியோ விடுவேன். ஆனால், இன்று காலை எஸ்.பி.பி.க்கு கொரோனா நெகடிவ் வந்துவிட்டதாக தகவல்கள் பரவின. நெகடிவ் அல்லது பாசிடிவ் என்பதல்ல விஷயம்.

அவர் தற்போதும் எக்மோ மற்றும் வெண்டிலேட்டர் உதவியுடனே சுவாசித்து வருகிறார். அவரின் உடல்நலம் பற்றிய தகவல் எனக்கே முதலில் வரும். ஆகவே, தவறான செய்திகளை வெளியிடுபவர்களிடம் கவனமாக இருங்கள்” என்று கூறியுள்ளார். எனினும், எஸ்.பி.பி.க்கு கொரோனா நெகடிவ் என்ற தகவல் உண்மையா என்றும் சரண் விளக்கமாக தெரிவிக்கவில்லை.