பெட்டாலிங் ஜெயா, ஆக. 24-

பிரேசிலிலிருந்து வியட்நாமிற்கு 3.3 கிலோ கோகோயின் கொண்டு சென்றதற்காக மலேசியப் பெண்ணுக்கு வியட்நாம் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது.

சட்டவிரோதமாகப் போதைப் பொருள் கடத்தியதற்காகக் கலைவாணி ஜி முனியாண்டி குற்றவாளி என வியட்நாமிய நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

40 வயதான அப்பெண், அக்டோபர் 2018 இல் துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானத்தில் ஹோ சி மின் நகரத்தில் தரையிறங்கியபோது கைது செய்யப்பட்டார்.

டான் சோன் நாட் விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளால் அவரது பயணப் பெட்டியிலிருந்த உணவிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3.3 கிலோ கோகோயின் கண்டுபிடிக்கப்பட்டது.

மலேசியாவில் உள்ள ஒரு விமான நிலையக் கிடங்கில் பாதுகாப்புப் பணியாளராக பணிபுரிந்தபோது, ஓர்  இந்திய நபர் தொழிலாளர் ஏற்றுமதி மற்றும் போதைப்பொருள் கடத்தலில் நிபுணத்துவம் பெற்ற பிரகாஷ் என்ற நபரின் தொலைப்பேசி எண்ணை தமக்குக் கொடுத்ததாகக் கலைவாணி கூறினார்.

அதன்  பின்னர், பிரகாஷுடன் அவர் வாட்ஸ்ஆப்பில் தொடர்பு கொண்டிருக்கின்றார்.  பிரகாஷ், கேட்டுக்கொண்டதற்கு இணங்க, வெளிநாடுகளில் உள்ள அவரது நண்பருக்குப் பொருட்களைக் கொண்டு செல்ல உதவியதில் கலைவாணி இந்த வலையில் சிக்கினார்.

பயணம்  மற்றும் தங்குமிட செலவுகளைத் தவிர ஒவ்வொரு பயணத்திற்கும் கலைவாணிக்கு  ரிம 6,000  வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.முன்னதாக தாம் கொண்டுவந்த பெட்டிகளுக்குள் அப்போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தமக்குத் தெரியாது என்று கலைவாணி கூறியிருந்தார்.