பிறமொழி பள்ளிகள் தேசிய ஒற்றுமைக்கு இடையூறா? மலேசியர்களுக்குள் பிளவை ஏற்படுத்தாதீர்! – டத்தோஶ்ரீ சரவணன்

கோலாலம்பூர், ஆக. 26-
மலேசியர்களிடையே ஒற்றுமையை வளர்ப்பதற்குப் பிறமொழிப் பள்ளிகளை மூட வேண்டியதன் அவசியம் குறித்து பெர்சாத்து இளைஞர் தலைவர் வான் அஹ்மத் ஃபாய்சல் வான் அஹ்மத் கமல் கூறிய தேவையற்ற அறிக்கை, 1957இல் சுதந்திரம் பெற்ற மலேசியாவில் நடைமுறை கல்வி சுதந்திரத்திற்கு எதிராக உள்ளது என மஇகா துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் கூறினார்.

இது நாட்டின் பல்வேறு இனங்களால் உருவாக்கப்பட்ட இன ஒற்றுமைக்கு எதிரானது. ஏனெனில் பிறமொழிப் பள்ளிகள் தேசிய ஒற்றுமைக்கு இடையூறு விளைவிப்பதாகவும் மலேசியர்கள் என்ற சிந்தனையை வளர்க்கத் தவறிவிட்டன என்பதும் இதுவரையில் நிரூபிக்கப்படவில்லையென அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

பிறமொழி பள்ளிகள் “தாய்மொழி” வளர்ச்சிக்குப் பங்களிப்பு செய்ததோடு மட்டுமல்லாமல், இந்த பள்ளிகளின் மூலம் உருவானவர்கள் நாட்டிற்காகச் சேவையாற்றியதோடு சிறந்த தலைவர்களாகவும் இருந்துள்ளனர் என்பதை டத்தோஶ்ரீ சரவணன் சுட்டிக் காட்டினார்.

”நாட்டை மேம்படுத்தியதற்காக அவர்களின் பங்களிப்பு கொண்டாடப்பட வேண்டும். அதை விடுத்து தேசிய ஒற்றுமைக்கு இடையூறு விளைவிக்கின்றது எனத் தவறாகச் சித்தரிக்கக்கூடாது.”

சுய அரசியல் இலாபத்திற்காக இனம் மத விவகாரங்களை ஆயுதமாகப் பயன்படுத்தக்கூடாது என்பதைத் தாம் வலியுறுத்த விரும்புவதாக டத்தோஶ்ரீ சரவணன் குறிப்பிட்டார்.

பெர்சாத்து இளைஞர் தலைவர் இதுபோன்ற அறிக்கையை வெளியிடுவது தேவையற்றது. பல ஆண்டுகாலமாக இதே நடைமுறையை நாம் பயன்படுத்தி வருகின்றோம். தேசிய ஒற்றுமையை உருவாக்கப் பிறமொழி பள்ளிகள் தவறிவிட்டன அல்லது தேசிய மொழியைப் புறக்கணிக்கின்றன என்பது ஒருபோதும் நிரூபிக்கப்படவில்லை.

உண்மையில் இந்த பிறமொழிப் பள்ளிகளின் மாணவர்கள் அறிவியல் கண்காட்சிகள் மற்றும் கணிதப் போட்டிகள் போன்ற பல்வேறு முயற்சிகளால் மலேசியாவை உலக அளவில் பெருமைப்படுத்தியுள்ளார்கள். மேலும் அவற்றின் சாதனைகளுடன் தேசிய சின்னங்களாக விளங்குகின்றன. அவர்களின் சாதனைகள் தனித்துத் தெரிகின்றன.

சில அரசியல்வாதிகள் இனம் மற்றும் மத விவகாரங்களைப் பயன்படுத்தி மலேசியச் சமூகத்தின் சில பிரிவுகளின் ஆதரவைப் பெறுவதற்காக தங்களில் அரசியலை முன்னெடுக்கின்றார்கள் இது நாட்டின் சமூக ஒற்றுமைக்கு எதிரானது என்ற தமது அச்சத்தையும் அவர் வெளிப்படுத்தினார்.

இந்த மலேசியத் திருநாட்டில் பல ஆண்டுகளாக நாம் வளர்த்த அமைதி, ஒற்றுமைக்கு ஆபத்தை விளைவிக்கும் இம்மாதிரியான நடைமுறைகள் தவிர்க்கப்பட வேண்டுமென இம்மாதிரியான அரசியல்வாதிகளுக்குத் தாம் ஆலோசனை கூறுவதாகவும் இன்று வெளியிட்ட அறிக்கையில் மனிதவள அமைச்சருமான டத்தோஶ்ரீ சரவணன் கூறினார்.