தேசிய முன்னணிக்கு குழி பறிக்கும் கேவியஸ்! டத்தோ சந்திரகுமணன் தாக்கு!

0
1

கோலாலம்பூர், செப். 4-

     தேசிய முன்னணியின் வேட்பாளராக கேமரன் மலையில் போட்டியிட தமக்கு வாய்ப்பளிக்கப்படாவிட்டால் அத்தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவேன் என மை பிபிபியின் தலைவர் டான்ஸ்ரீ எம்.கேவியஸ் அறிவித்துள்ளது தேசிய முன்னணிக்கு குழி பறிக்கும் செயல் என மக்கள் புகார் மையத்தின் தலைவர் டத்தோ சந்திரகுமணன் தெரிவித்தார்.

     கடந்த பல மாதங்களாக அத்தொகுதியில் மக்கள் சேவையில் ஈடுபட்டு வந்துள்ளதால் அத்தொகுதியில் தாம் போட்டியிடுவேன் என அவர் கூறியிருப்பது அவரின் சந்தர்ப்பவாத அரசியலை காட்டுவதாக அவர் சொன்னார்.

       தேசிய  முன்னணியில் உறுப்பு கட்சியாக அங்கம் வகிக்கும் ஒரு கட்சியின் தலைவரான கேவியஸ் தேசிய முன்னணியின் கொள்கையை மீறலாமா? வருகின்ற பொதுதேர்தலில் யார் எந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டிய அதிகாரம் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கும்  தேசிய முன்னணியின் தலைமைத்துவத்திற்கு மட்டுமே உள்ளது. இது பல ஆண்டுகள் அரசியலில் ஈடுபட்டுவரும் கேவியஸுக்கு தெரியாதது அல்ல.

     ம.இ.காவிற்கு சொந்தமான தொகுதியில் போட்டியிட கேவியஸ் இவ்வளவு முனைப்பு காட்டுவது ஏன்? ம.இ.காவிற்கு சொந்தமான தொகுதியில் போட்டியிட அவர் எண்ணம் கொண்டிருந்தால் பாதிப்பு தேசிய முன்னணிக்குத்தான் ஏற்படும் என்பது அவருக்கு தெரியாதா?

     கேவியஸ் தனது பலத்தை நிரூபிக்க வேண்டுமென்றால் எதிர்கட்சிகள் வசமிருக்கும் தொகுதியை தேர்தெடுத்து அதில் போட்டியிட்டு காட்டட்டும். அதைவிடுத்து கூட்டணி தர்மத்தை மீறும் வகையில் செயல்பட கூடாது என டத்தோ சந்திரகுமணன் வலியுறுத்தினார்.