கோலாலம்பூர், செப் 26- பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் இழப்பு ஈடுஇணையற்றது என்று ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஆயிரம் நிலவே வா…..ஓராயிரம் நிலவே வா….என்னும் பாடலின் மூலம் தன் திரை இசை பயணத்தை தொடங்கிய எஸ்.பி.பாலா பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடி உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டிருந்த நிலையில் மீண்டு வருவார் என்று அனைவரும் நம்பிக்கையோடு எதிர்பார்த்த வேளையில் மீலாத்துயில் கொண்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் கூறினார்.

எஸ்.பி்.பியின் திடீர் மரணம் உலக மக்களை அதிர்ச்சியில் உறையச் செய்துள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என்று 16 மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி மக்களைத் தன் வசீகர குரலால் கட்டிப் போட்ட எஸ்.பி.பியின் குரலை இனி நாம் கேட்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

கடந்த 1946இல் பிறந்து 1970களில் இசைப் பயணத்தை தொடங்கிய எஸ்பிபி மலேசியாவிற்கு பலமுறை கலைநிகழ்ச்சிகள் படைக்க வந்துள்ளார். எஸ்.பிபி பாடல்கள் என்றால் உயிரோட்டமாக இருக்கும் என்பதை நான் மட்டுமன்றி பலரும் அறிவர். 1980களில் இசைஞானி இளையராஜா இசையில் சுமார் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ள எஸ்பிபி இசையமைப்பாளர்கள் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் சங்கர் ராஜா, அனிருத் ஆகியோருடன் பணியாற்றியுள்ள எஸ்பிபியின் குடும்பம் ஒரு கலைக்குடும்பம். எஸ்பிபியின் தங்கை எஸ்பி சைலஜா, மகன் எஸ்பிபி சரண் ஆகியோரும் சிறந்த பாடகர்களாவர் என்றால் அது மிகையில்லை.

நான்கு தலைமுறையின் உன்னத கலைஞர் இன்று நம்மோடு இல்லை என்று நினைக்கும் போது மனம் அதனை ஏற்று கொள்ள முடியவில்லை. அவரின் உடலுக்குதான் மரணமே தவிர அவரின் குரலுக்கு அல்ல. அவர் நம்மோடு பாடலாகவும் இசையாகவும் என்றும் வாழ்ந்துக் கொண்டிருப்பார்.

இந்த வேளையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவு கண்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைவதாகவும் மலேசிய ம.இ.கா, மலேசிய இந்தியர்கள், மலேசிய கலைஞர்கள் சார்பில் அன்னாரது குடும்பத்திற்கு டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.