-நக்கீரன்

அகிம்சையின் அடையாளமாக, அறவழிப் போராட்டத்தின் இலச்சினை-யாக எதிர்காலத்தில் ஓர் அடையாளம் தேவைப்பட்டால் நாளைய மாந்தரின் கண்களின் பளிச்சென பதியும் ஓர் உருவம் மாவீரன் திலீபனின் திருவுருவேயாகும் .

பந்தல் அமைத்து, விளம்பரம் செய்து உண்ணாவிரதைப் போராட்டம் என்ற பெயரில் இற்றை நாட்களில் நடத்தப்படும் அரசியல் பம்மாத்துக்காரர்-களின் மனம், ஈழ தியாகி திலீபனின் உண்ணாநிலைப் போராட்டத்தை எண்ணிப் பார்த்தால் நிச்சயமாக நாணமுறும்.

பதினோரு நாட்கள் நீர்கூட பருகாமல் உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டு தன் இன்னுயிரை தமிழீழ தாயகத்திற்காக ஈகம் புரிந்த திலீபனின் 33-ஆவது நினைவு நாள் இன்று(செப்டம்பர் 26).

தான் பிறந்த மண்ணின் விடுதலைக்காகவும் மண்வாழ் மக்களின் சம உரிமைக்காகவும் போராடி 1931 மார்ச் 23-ஆம் நாள் மாலைப் பொழுது விடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் மாவீரன் பகத்சிங் தூக்கு மேடையில் ஏறியபோது, 24 வயதை மட்டுமே எட்டியிருருந்தார்; அவரைப் போலவே இலங்கையின் இன ஒதுக்கல் கொள்கையையும் இந்தியாவின் வஞ்சக வல்லாதிக்கத்தையும் எதிர்த்து உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டு 1987-ஆம் ஆண்டு இதே நாளில் உயிர்நீத்தபொழுது, தியாகி திலீபனும் 24 வயதை எட்டியிருருந்தார்.

இந்த மறவர்குல திலகங்களுக்கு இத்தகைய திண்ணிய மனமும் கொள்கை உறுதியும் எப்படி வாய்த்தது என்பதை எண்ணும்பொழுது, உள்ளம் சிலிர்க்கிறது; மனம் விம்முகிறது.

அந்நாளைய இலங்கை அரசிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த விடுதலைப்புலி திலீபனின் நினைவு தின நினைவலைகள், உலகத் தமிழர்களின் நெஞ்சங்களை இன்று நெருடிச் செல்லும்.

சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறைக்கு ஆட்பட்ட ஈழத் தமிழர்களுக்காக அமைதி வழியில் போராடியவர் தந்தை செல்வா. இவர், மலேசியத் திருநாட்டின் வெள்ளி மாநிலத்தில் தோன்றியவர். அவருக்குப்பின் ஆயுத வழியிலான போராட்டத்தை தமிழீழ இளைஞர் திருக்கூட்டம் முன்னெடுத்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் அதை எழுச்சியுடன் முன்நகர்த்தினார்.

அந்த இயக்கத்தில் இணைந்த திலீபன், யாழ் மாவட்ட அரசியல் பிரிவுத் தலைவராக பொறுப்பாற்றினார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தொடக்ககால உறுப்பினரான திலீபன், தொழில் ரீதியாக ஒரு மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அமைதிப்படை இலங்கைக்கு சென்றிருந்த தருணமது; அப்போது, இந்தியா கேட்டுக்கொண்டதற்கு இணங்க விடுதலைப் புலிகள் தங்களின் ஆயுதங்களை ஒப்படைத்தனர். அந்த ஆயுதங்களை விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயல்பட்ட ஆயுதக் குழுக்களுக்கு இந்திய இராணுவம் வழங்கி குயுக்தியுடன் செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அத்துடன், இந்திய அமைதிப் படைமீது மேலும் பல்வேறு குற்றச்சாட்டுகளும் எழுந்தன.

இதற்கெல்லாம் எதிர்ப்பு தெரிவித்தும் இலங்கை அரசுக்கு ஐந்து கோரிக்கைகளை முன்வைத்தும்தான் செப்டம்பர் 15-ஆம் நாள் திலீபன் உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கினார்.

தமிழ் ஈழ அரசியல் கைதிகளை விடுதலை செய்வதுடன் அவர்களின்மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் தொடரப்பட்ட வழக்கை இலங்கை அரசு திரும்பப் பெற வேண்டும்; தமிழ் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களை உடனே நிறுத்த வேண்டும்; வடக்கு-கிழக்குப் மாகாணங்களில் செயல்படும் பள்ளி, கல்லூரி வளாகங்களில் முகாம் இட்டிருந்த காவல்துறையினரை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை இந்திய அரசிடமும் இலங்கை அரசாங்கத்திடமும் முன்வைத்தே இந்த உண்ணாவிரதத்தை திலீபன் மேற்கொண்டிருந்தார்.

ஆயினும் திலீபனுடைய கோரிக்கைகள் இரு அரசுகளாலும் ஒருசேர புறக்கணிக்கப்பட்டன. உலகத்தின் செவிப்பறைகளில் உண்ணா நோன்பின் மகத்துவத்தை ஓங்கி ஒலித்த திலீபன், பிறந்த மூன்றே மாதங்களில் தன் தாயை இழந்தவர்.
அமைதி ஒப்பந்தம் என்கிற பெயரில் ஈழத் தமிழ் மக்களின் உரிமைகள் பறிபோக மீண்டும் ஓர் ஒப்பந்தம் கையொப்பமானது. ஈழ மக்கள் அதை ஏற்றுக்கொள்ளவும் நிர்பந்திக்கப்பட்டனர். அதை மறுத்த காரணத்தால், அமைதியை நிலைநாட்ட வந்தவர்களே தமிழீழ மண்ணுக்கும் மக்களுக்கும் எதிராக செயல்பட்டனர். அவர்களுக்கு பதில் சொல்ல முனைந்த திலீபன், எல்லாவற்றுக்கும் சேர்த்துதான் உண்ணாநோன்பு என்னும் அறவழிப் போராட்டத்தை அண்ணல் காந்தியார் வழியில், அவரைவிட இன்னும் மேம்பட்ட முறையில் கையிலெடுத்தார்.

“ஈழ தேச மக்களுக்கான இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படும்வரை உண்ணாவிரதத்தைத் தொடர்வேன்; ஒரு சொட்டு தண்ணீர்கூட பருக மாட்டேன்; எனக்கு மருத்துவப் பரிசோதனை செய்யக்கூடாது. உணர்வை இழந்த பின்னரும் என் வாயில் தண்ணீர் ஊற்றக் கூடாது; இறக்கும்வரை எவ்வித சிகிச்சையும் அளிக்கக்கூடாது” என்ற விதிகளை உறுதிசெய்த பின்னரே போராட்டத்தைத் தொடங்கினார் திலீபன்.
நாட்கள் செல்ல செல்ல துவண்டு சுருண்ட திலீபனின் நிலை கண்டு மக்கள் வேதனை அடைந்தது ஒருபுறமிருக்க, திலீபனின் நிலையைப் பொறுக்கமாட்டாமல் தலைவர் பிரபாகரனே நேரில் வந்து உண்ணாநிலை போரட்டத்தை கைவிடும்படி கேட்டுக் கொண்டார்.
“நம் கொள்கைப் பிடிப்பை நிலநாட்ட இதைவிட்டால் வேறு வழியில்லை; நாம் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை ஏற்கவில்லை என்பதை ஈழ மக்களுக்கும் தமிழக மக்களுக்கும், உலகத் தமிழர்களுக்கும் சொல்லவேண்டிய தருணம் இது. இன்னொரு ராணுவம் எங்கள் மண்ணில் நிலைகொள்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்பதையும் அழுத்தமாகச் சொல்லவேண்டிய தருணம் இது. அதையும் இந்தியாவின் வழியிலேயே சொல்ல உண்ணாவிரதம்தான் ஒரே வழி” என்று பதிலுரைத்து தலைவர் பிரபாகரநினின் கோரிக்கையை மறுதலித்தார் திலீபன். தலவர் சொல்லி, திலீபன் பறுத்த விடயம் இது ஒன்றுதான்.
திலீபனின் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு அஹிம்சை தேசத்து ஆட்சியாளர்கள் அசைந்து கொடுக்காத சூழலில், கொள்கை உறுதி கொண்ட விர மறவரான திலீபன், பன்னிரண்டாம் நாளில் (26.9.1987) ஈழ மண்ணில் மீளா துயில் கொண்டு விட்டார்.
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலயத்திற்கு அருகில் தொடங்கப்பட்ட இந்த உண்ணாவிரதம் செப்டம்பர் மாதம் 26 ஆம் இராசையா பார்த்திபன் என்னும் இயற்பெயரைக் கொண்ட திலீபனின் உயிர் நீத்தலுடன் முடிவடைந்தது.
ஆயினும், தமிழருக்கென ஒரு தாயகம் மலரும் என்ற எண்ணம் கொண்டோரின் உள்ளத்தில் அணையாது எரிந்து கொண்டிருக்கும் நம்பிக்கை தீபத்தின் நெய்யாக திலீபனின் தியாகம் நிலை கொண்டிருக்கும் என்பது மட்டும் திண்ணம்.
வாழ்க தமிழ்! வெல்க தமிழீழம்!!