பத்துமலை செப். 10-   

மலேசியாவில் உள்ள இந்து ஆலயங்களை மலேசிய இந்து சங்கம் பொறுப்பல்ல. அவர்கள்  தனியார் நிறுவனம். சுய விருப்பத்திற்காக மட்டுமே அந்நிறுவனம் செயல்படுவதாக ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் தான் ஸ்ரீ நடராஜா தெரிவித்தார்.   

Covid-19 கிருமித் தொற்று மலேசியாவில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால் அடுத்த ஆண்டு தைப்பூசத்தை ஒத்தி வைக்கும் பரிந்துரைக்கு மலேசிய இந்து சங்கம் ஆதரவு தெரிவித்திருந்தது. அது குறித்து கருத்துரைத்த அவர் மேற்கண்டவாறு கூறினார்.   

இவ்வாண்டு பல சமய நிகழ்ச்சிகளும் தீபாவளி பெருநாளும் வரவிருக்கின்றன. அதை முதலில் கவனிக்காமல் தைப்பூசத்தின் மீது இவர்கள் ஏன் கவனம் செலுத்துகிறார்கள் என அவர் கேள்வி எழுப்பினார்.   

Covid-19 கிருமித்தொற்று மலேசியாவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி அதனால் தைப்பூசத்தை நடத்தக்கூடாது என அரசாங்கம் அறிவித்தால், அதற்கான நடவடிக்கையை முன்னெடுக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம். அது அனைத்து சமயத்திற்கு பொதுவானதாக இருக்க வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் மக்கள் தொழுகைக்கும் கூடுகிறார் என்பதை அவர் நினைவுபடுத்தினார்.

அதோடு தைப்பூசம் குறித்து சில தரப்பினர் பேசிவருவது ஏற்புடையது அல்ல என்றார் அவர்.   மலேசிய மருத்துவ சங்கத்தின் தலைவர் பெர்னாமா தமிழ் செய்திக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் தைப்பூசத்தைத் தவிர்க்கலாம் என ஆலோசனை வழங்கியிருந்தார். அதில்  ”காவடி கிவடி” எனக்கூறி அந்த மருத்துவர் இந்துக்களின் நெறிமுறையைத் தவறாகப் பேசி உள்ளார் என நடராஜா சாடினார்.   

அவரது கருத்துக்கு மலேசிய இந்து சங்கம் ஆதரவு தெரிவித்திருந்தது. மலேசிய இந்து சங்கத்தின் தாங்கள்10 ஆயிரம் ரிங்கிட் வழங்கியதையும் தான்ஶ்ரீ நடராஜா சுட்டிக்காட்டினார். இந்து சங்கம் எந்த ஆலயத்தையும் வழிநடத்தவில்லை. அவர்களுக்கு ஆலயங்களின் நிலைப்பாடு புரியாது.   

ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் பல சேவைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கிறது. அதை விளம்பரப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் எங்களுக்கு இல்லை. எங்களது சேவைகளை மதிக்காது போனாலும் அதற்குத் தடையாக இருக்காதீர்கள் என்ற பரிந்துரையையும் அவர் முன் வைத்தார். 

முன்னதாக உயர்கல்வி பயிலவிருக்கும் 15 மாணவர்களுக்கு மகாமாரியம்மன் தேவஸ்தானத்தின் ஏற்பாட்டில் மொத்தமாக 85 ஆயிரம் ரிங்கிட் நிதி உதவி வழங்கப்பட்டது. இதில் ஆலய நிர்வாகத்தினர் உட்பட அறங்காவலர் டத்தோ சிவகுமாரும் கலந்து கொண்டார்