மூனிக், செப்.5-

உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியின் நடப்பு வெற்றியாளரான ஜெர்மனி , திங்கட்கிழமை நடைபெற்ற சி பிரிவுக்கான தகுதிச் சுற்று ஆட்டத்தில் நார்வேயை 6 – 0 என்ற கோல்களில் தோற்கடித்துள்ளது.

இந்த வெற்றியின் வழி அடுத்த ஆண்டில் ரஷ்யாவில் நடைபெறவுள்ள 2018 உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிக்குத் தேர்வாகும் தனது வாய்ப்பை ஜெர்மனி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

நார்வேக்கு எதிரான ஆட்டத்தில் முதல் 21 நிமிடங்களில் ஜெர்மனி நான்கு கோல்களைப் போட்டது. இதில் திமோ வார்னர் இரண்டு கோல்களைப் போட்டு அதிரடிப் படைத்தார். ஜெர்மனியின் இதர நான்கு கோல்களை மெசூட் ஓசில், ஜூலியன் டிராக்ஸ்லர், லியோன் கோரேட்ஸ்கா, மரியோ கோமேஸ் ஆகியோர் போட்டனர்.

அக்டோபர் 5ஆம் தேதி நடைபெறவுள்ள வட அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் ஜெர்மனி அடுத்த ஆண்டில் நடைபெறும் உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்க முடியும். இதுவரை நடைபெற்ற எட்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ள ஜெர்மனி 24 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.