சென்னை, திசம்பர் 10:-

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” தொடரில் ‘முல்லை’ கதாபாத்திரத்தில் நடித்து புகழைந்த சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று முன்தினம் இரவு படப்பிடிப்பை முடித்து விட்டு சொகுசு தங்கும் விடதிக்குத் திரும்பிய சித்ரா திடீரெனத் தற்கொலை முடிவை எடுத்து தூக்கில் தொங்கியிருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.

சித்ராவுக்கும், பூந்தமல்லி கரையான்சாவடியைச் சேர்ந்த ஹேம்நாத்துக்கும் இடையே திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் இதன் பிறகு இருவரும் நெருங்கி பழகி இருக்கிறார்கள். படப்பிடிப்புக்குப் பல நேரங்களில் சித்ராவை ஹேம்நாத் அழைத்துச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். அந்த அளவுக்கு இருவரும் அன்பாகவே இருந்துள்ளனர். 

இந்த நிலையில் கடந்த அக்தோபர் மாதம் இருவரும் பதிவுத் திருமணமும் செய்து கொண்டனர். சனவரி மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் திடீரென பதிவுத் திருமணம் செய்தது ஏன்? இத்தனை ஆண்டுகளும் திருவான்மியூர் வீட்டில் இருந்து படப்பிடிப்புக்குச் சென்று வந்த சித்ரா சொகுசு தங்கும் விடுதியில் தங்கியது ஏன்? என்பது போன்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.

திருமண நிச்சயதார்த்தத்துக்கு பிறகு கரையான்சாவடியில் உள்ள ஹேம்நாத் வீட்டில் சித்ரா தங்கியிருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் சித்ராவின் மரணம் தொடர்பாகப் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. மக்களிடையே சித்ராவை புகழடையச் செய்த “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ‘முல்லை’ கதாபாத்திரமே அவரது உயிருக்கு எமனாக மாறி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

‘முல்லை’ கதாபாத்திரத்தில் 3-வது மருமகளாக நடித்த சித்ரா கணருடன் நெருக்கமாக இருப்பது போன்ற காட்சிகள் படமாக்கப் பட்டதாகவும் அதில் ஹேம்நாத்துக்கு உடன்பாடு இல்லை என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் தெரிகிறது. அது மோதலாக மாறி இருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கிறார்கள். அதே நேரத்தில் திடீரென பதிவு செய்து கொண்டது ஏன்? என்பதும் பலத்த கேள்வியை எழுப்பி உள்ளது.

சனவரி மாதம் வரையில் திருமணத்துக்கு காத்திருக்காமல் சித்ரா- ஹேம்நாத் இருவரும் தங்களது கணவன் – மனைவி உறவை உறுதிப்படுத்துவதற்குக் காரணமாக அமைந்தது எது? என்பதும் மிகப் பெரிய கேள்வியாக மாறி இருக்கிறது.

திருமணம் நிச்சயமான பிறகு சித்ரா-ஹேம்நாத் திருமணத்தில் பல்வேறு தடைகள் ஏற்பட்டதாகவும் அதன் காரணமாகவே இருவரும் பதிவுத் திருமணம் செய்திருக்கலாம் என்றும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. இது தொடர்பாகவும் முல்லை கதாபாத்திரத்தால் ஏற்பட்டப் பிரச்சினை தொடர்பாகவும் நசரத்பேட்டை காவல்துறை அதிரடி விசாரணையை நடத்தி வருகிறார்கள்.

சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் நேற்று முழுவதும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இன்று 2-வது நாளாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே சித்ராவுடன் நண்பர்களாகப் பழகிய சின்னத்திரை நடிகர்- நடிகைகளிடமும் காவல்துறை அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

தற்கொலை செய்து கொண்ட அன்று படப்பிடிப்பின்போது சித்ரா அடிக்கடி கைப்பேசியில் பேசியதாகவும் தெரிகிறது. இதையடுத்து அன்று முழுவதும் அவர் யார்-யாரிடம் கைப்பேசியில் உரையாடினார். அவரை அழைத்துப் பேசியவர்கள் யார்? என்பது போன்ற விவரங்களைச் சேகரித்துள்ள காவல்துறை அனைவரிடமும் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். அந்த வகையில் சின்னத்திரையில் புகழ்பெற்ற பல நடிகர்-நடிகைகளும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட உள்ளனர்.

நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் அவரது முகத்தில் 2 இடங்களில் ஏற்பட்டக் காயங்களும் சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கிறது. சித்ரா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது போன்ற கேள்விகளும் எழுந்துள்ளன. இதனால் அவரது மரணத்தில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது.

இதற்கிடையே சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சித்ராவின் உடல் இன்று சவப்பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. சவப்ரிசோதனை முடிந்த பின்னர் சித்ரா மரணத்துக்கானக் காரணம் என்ன என்பது பற்றிய விசாரணையை காவல்துறை மேலும் தீவிரப்படுத்த உள்ளனர். இதன் பிறகே சித்ராவின் மரணத்தில் உள்ள மர்மம் விலகுவதற்கு வாய்ப்புள்ளது.

– நன்றி : மாலை மலர்