மெட்ரிட், செப். 6 –

2018 உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிக்கு தகுதிப் பெறும் வாய்ப்பை ஸ்பெயின் கிட்டத்தட்ட உறுதிச் செய்துள்ளது. 2010 ஆம் ஆண்டில் உலகக் கிண்ணத்தை வென்ற ஸ்பெயின் செவ்வாய்கிழமை நடைபெற்ற சி பிரிவுக்கான தகுதிச் சுற்று ஆட்டத்தில் 8 – 0 என்ற கோல்களில் லைச்டென்ஸ்டைன் அணியை வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் சி பிரிவில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இத்தாலியைக் காட்டிலும் ஸ்பெயின் 3 புள்ளிகள் வித்தியாசத்தில் முதலிடத்தில் உள்ளது. அடுத்த மாதம் அல்பேனியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் ஸ்பெயின், 2018 உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிக்கு நேரடியாக தேர்வுப் பெற முடியும்.

கடந்த ஆண்டில் தனது சொந்த அரங்கில் 8- 0 என்ற கோல்களில் ஸ்பெயின் ,லைச்டென்ஸ்டைனை தோற்கடித்திருந்தது. இம்முறை அதே கோல் எண்ணிக்கையில் எதிரணியின் இடத்தில் ஸ்பெயின் வெற்றியைப் பதித்துள்ளது.

செர்ஜியோ ராமோஸ், அல்வாரோ மொராத்தா, டாவிட் சில்வா , ஹியூகோ அஸ்பாஸ், இஸ்கோ ஆகியோர் ஸ்பெயின் அணியின் எட்டு கோல்களையும் போட்டனர்.

இதனிடையே சிரோ இம்மோபில் அடித்த ஒரே கோல் இத்தாலி அணியின் வெற்றியை உறுதிச் செய்துள்ளது. இந்த வெற்றியை அடுத்து இத்தாலி , சி பிரிவில் இரண்டாவது இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது.

சி பிரிவில் இன்னும் இரண்டு ஆட்டங்கள் எஞ்சியுள்ள வேளையில் இத்தாலி அந்த பிரிவின் வெற்றியாளராக வாகை சூட இன்னமும் வாய்ப்பு கொண்டுள்ளது.

எனினும் இத்தாலியைக் காட்டிலும் ஸ்பெயின் நேரடியாக உலக கிண்ண கால்பந்துப் போட்டிக்கு தகுதிப் பெறும் நிலையைக் கொண்டிருப்பதால் இத்தாலி, பிலே ஆப் சுற்றின் வழி அடுத்த ஆண்டில் ரஷ்யாவில் கால் பதிக்க முடியும்.