ஈப்போ, திசம்பர் 10:-
திருக்குறளைப் பழித்து தலையங்கத்தில் கட்டுரை வெளியிட்ட தமிழகத்தின் தினமணி நாளேட்டு ஆசிரியரும் அந்தக் கட்டுரையை எழுதியவரும் உலகத் தமிழரிடம் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என மலேசியாவைச் சேர்ந்த குறிஞ்சித்திட்டுத் தமிழ்க்கழகம் தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அக்கடிதம் பின்வருமாறு :
தமிழகத்தில் வெளியீடு காணும் தினமணி நாளிதழில் கடந்த 20/11/2020 ஆம் நாள் கட்டுரையாளர் நடராசனால் “மநுவுக்கு ஏன் இந்த எதிர் மனு?” எனும் தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதப்பட்டு வெளியிடப்பட்டிருந்தது.
மநு நீதியின் மேல் பற்றும், பக்தியும், ஈடுபாடும், பரவசமும் கொண்ட நீங்கள் அந்நூலைத் தற்காப்பதில் எங்களுக்கு எவ்வகையான சிக்கலும் இல்லை. அதனை உங்கள் தலையில் தூக்கி வைத்து போற்றிக் கொண்டாடுங்கள். அது உங்களுடைய நம்பிக்கை; உங்களைப் போன்றவர்களைச் சார்ந்தது.
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் என முப்பாட்டன் வள்ளுவன் கூறியிருப்பது போல், மநு நீதியைத் தாக்குமபடியாகத் யாரேனும் கருத்துக்களை வெளியிட்டிருந்தால், எந்தக் கோணத்தில், எதன் அடிப்படையில், எப்படிப்பட்டச் சூழலில் அக்கருத்து வெளியிடப்பட்டிருந்ததோ, நேரடியாக அதற்குச் சமமான அக்கருத்தை வெளியிட்டத் தரப்புக்குப் பதிலடி கொடுங்கள். அதற்கான உங்களின் எண்ணமும் முனைப்பும் உங்களின் தார்மீக உரிமை.
ஆனால் ஒரு குறிப்பிட்ட மதத்தின் மறையான மநு நீதியைத் தற்காப்பதாகக் கூறி, உலக மனித குலத்துக்கே பொது மறையாக எழுதப்பட்டத் திருக்குறளை ஒப்பிட்டுக் காட்டுவது என்பது இனம் வேறு மதம் வேறு எனும் அடிப்படையைக் கூட விளங்கிக்கொள்ள இயலாதத் தன்மையையும் மடமையையும் கற்பனைத் திறனில் குறுகியச் சிந்தனையையும் கொண்டவராக எழுத்தாளர் ஐயா ஆர் நடராசனார் தன்னைக் காட்டிக் கொள்ளும்போது மிகவும் வேதனையாக உள்ளது.
தவறான நோக்கில் திருக்குறளில் கை வைப்பதும் தேன் கூட்டில் கை வைப்பதும் ஒன்றேன்றறிக.
இவ்வாறான இனம் வேறு மதம் வேறு எனும் அடிப்படையைக் கூட விளங்கிக்கொள்ளாமல் மடமையையும் கற்பனைத் திறனில் குறுகியச் சிந்தனையையும் கொண்ட எழுத்துப் படைப்பை எடுத்து அதனை அங்கீகரிக்கும் வகையில் “வரலாற்று ஆசிரியரான” அந்நாளிதழின் தலைமை ஆசிரியர் ஐயா தினமணி வைத்தியநாதன் பொதுமக்கள் வாசிப்புக்கு வெளியிட்டிருப்பது வரலாற்றுப் புலமை குறித்து அவரின் அறிவின்மையையும் தரத்தின் தகுதியையும் வெட்ட வெளிச்சமாகக் காட்டுகிறது.
தினமணி நாளேட்டுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால், உலகெங்கும் பரவிக் கிடக்கும் ஒட்டுமொத்தத் தமிழர்களை அவமதிக்கும் வகையிலும் எங்களை மன அழுத்தத்துக்குக் கொண்டு சென்ற வகையில் எங்கள் இனத்தின் அடையாளமானத் திருக்குறளைத் தவறான எண்ணத்தோடு தொட்டிருப்பதற்கு எதிராக எங்களின் முதல் எச்சிக்கைக் கண்டமாக இதனைப் பதிவு செய்கிறோம் !
‘மதம்’ தொடர்பான வேறுபாடுகளையும் ‘இனம்’ தொடர்பான வேறுபாடுகளையும் மேலும் மேலும் குழப்பிக் கொள்ளாதீர்கள். தமிழர்கள் எல்லாமே இந்துக்கள் அல்லது இந்துக்கள் எல்லாமே தமிழர்கள் என்று தவறான அடையாளப் படுத்தும் வகையில் இருக்கும் உங்கள் செயல்பாடுகளை நிறுத்திக் கொள்ளுங்கள். இவை யாவும் உங்களின் மட்டமான, கடமையுணர்ச்சியற்ற, முதிர்ச்சியற்ற, குறுகிய சிந்தனையைக் காட்டுகிறது.
தமிழாலும் தமிழர்களாலும் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் உங்களைப் போன்ற அரைகுறை ஆசிரியர்கள் தெளிவில்லாத செய்திகளை வெளியிடுவதால் தான் தமிழினத்தில் தெளிவு நிலை இல்லாமல் மேலும் மேலும் குழம்பிப் போய் தன் அடையாளம் என்னவென்று அறியாமல் இருக்கிறார்கள்.
பொதுவான தமிழ் இனத்தின் படைப்புகளை நீங்கள் பெருமைப் படுத்தவில்லை என்றாலும் பரவாயில்லை. கொச்சைப்படுத்தாமல், சிறுமைப்படுத்தாமல் இருந்தாலே போதுமானது. அது மட்டும் இல்லாமல் ஊடக நீதியை மீறி, உங்களின் குறுகிய மடக் கற்பனையை சுயநலத்துக்காகப் பயன்படுத்தாதீர்கள். இச்செயல் மிகப்பெரிய குற்றம்.
நடு நிலைமையாக எவ்வகையானச் சார்பும் இன்றி மக்களுக்குச் செய்திகளைக் கொண்டு சேர்க்கும் உன்னதமான உயர்வான ஊடகத் துறையில் இருந்து கொண்டு இது போன்று கீழத்தனமானச் செயல்களில் ஈடுபடுவது அருவறுக்கத்தக்க ஒன்றாகும்.
வெளியிடப்பட்டக் அக்கட்டுரையைத் திரும்பப் பெற்றுக் கொள்வதோடு இல்லாமல், உலகப் பொது மறையான திருக்குறளைத் தவறான முறையில் ஒப்பிட்டதற்காக உங்களின் நாளிதழ் (இணையத்தளம், அச்சு வெளியீடு, இதர ஊடகம்) வாயிலாக விரைந்து பொது மன்னிப்பும் கேட்க வேண்டும். அதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறோம்.
இவ்வகையானச் செயல்களின் வழி பொது மக்களின் நேரத்தையும் உங்களின் நேரத்தையும் வீணடிக்காதீர்கள்.
விரைந்து சிறந்த ஊடகவியலாளர்களாக நடந்து கொள்ள முயற்சியுங்கள். மிக அதிகமான நல்ல முன்னெடுப்ப்புகளை இத்தரணிக்கு நாம் வழங்க வேண்டும். இது போன்ற குழப்பங்களை மக்களிடத்தில் விளைவிக்க வேண்டாம் என மலேசியா குறிஞ்சித்திட்டுத் தமிழ்க்கழகத்தின் தலைவர் பிரபு கிருட்டிணன் அக்கண்டன அறிக்கையின் வழி தினமணி நாளேட்டைக் கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் சென்னையில் தினமணி நாளேட்டுக்குக் கண்டனக் கூட்டம் இன்று ஏற்பாடு செய்யப்பட்டு அதில் தமிழறிஞர் ஐயா மறைமலை இலக்குவனார் உறையாற்றியும் இருக்கிறார்.