சென்னை, திசம்பர் 12:-

பிரபல தொழிலதிபர் பயோபிக்கில் நடிக்கிறீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்திருக்கிறார், நடிகர் மாதவன். தற்போது பிரபலங்களின் பயோபிக் படங்கள் உருவாவது டிரெண்டாகி வருகிறது.

நடிகை சாவித்ரியின் வாழ்க்கை கதை ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் உருவாகி சூப்பர் ஹிட்டானது. இதில் நடித்த கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது கிடைத்தது.

கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கை சூரரைப் போற்று என்ற பெயரில், சூர்யா நடிப்பில் உருவாகி ஹிட்டானது.

இப்போது தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதை ‘தலைவி’ என்ற பெயரில் உருவாகி வருகிறது. மேலும் பலரின் வாழ்க்கை கதைகள் படமாக்கப்பட்டு வருகிறது.

ரத்தன் டாடா இந்நிலையில், பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் பயோபிக்கில் மாதவன் நடிக்க இருப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வந்தன. இதை சுதா கொங்கரா இயக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. அந்த கேரக்டரில் அவர் இருக்கும் புகைப்படமும் வெளியாகி இருந்தது.

இதுபற்றி ரசிகை ஒருவர், மாதவனிடம் சமூக வலைதளப் பக்கத்தில் கேட்டிருந்தார். அதற்கு நடிகர் மாதவன் விளக்கம் அளித்துள்ளார். ‘அது உண்மையில்லை. ரசிகர்கள் சிலர் உருவாக்கிய போஸ்டர் அது. இப்படி ஒரு படத்தில் நடிக்கப் போவதாக இல்லை. அதுபற்றி பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என கூறியுள்ளார்.

இதையடுத்து அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார், நடிகர் மாதவன். அவர் இப்போது, விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கைக் கதையைக் கொண்ட படமான ராக்கெட்ரி படத்தை நடித்து இயக்கியுள்ளார். இது, தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது.

நன்றி : ஓன் இந்தியா தமிழ்