“விண்வெளித் துறையில் 2007ஆம் ஆண்டுக்குப் பிறகு அனைத்துலக அளவிலான சாதனையை மலேசியா பதிவு செய்யவில்லை, அதை நான் கையில் எடுக்க முயல்கிறேன். நாசாவுக்குச் செல்லும் எனது கனவுப் பயணத்தில் ‘அட்வான்சிங் எக்ஸ்’ நடத்தும் வின்வெளி வீரருக்கானத் தேடல் குறித்த போட்டியில் இன்று மூன்றாம் கட்டத் தகுதிச் சுற்றில் இருக்கிறேன்” எனக் கண்களில் இலக்கு நோக்கிய பார்வையுடன் அநேகனுடன் தனது வெற்றிப் பயணம் குறித்துப் பகிர்ந்து கொள்கிறார் வான்மித்தா ஆதிமூலம்.

விண்வெளி வீரர்களுக்கானத் தேடல் தொடர்பான போட்டியில் தற்சமயம் மூன்றாம் கட்டத்தைக் கடந்திருக்கும் இவர் 2000ஆம் ஆண்டு ஈப்போவில் பிறந்தார்.

தனது தொடக்கக் கல்வியை சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் பயின்று இடைநிலைக் கல்வியை கிள்ளான் மெதடிஸ்ட் பெண்கள் இடைநிலைப்பள்ளியில் தமிழ்மொழி தமிழ் இலக்கியத்தையும் கட்டாயப்பாடமாக எடுத்து 2017ஆம் ஆண்டு எஸ்பிஎம் தேர்வில் சிறந்த தேர்ச்சியைப் பெற்றார்.

பின்னர், கிளந்தானில் மெட்ரிகுலேஷனை முடித்த இவர் தற்சமயம் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் விண்வெளி பொறியியல் துறையில் இரண்டாம் ஆண்டில் பயில்கிறார்.

சிறு வயது முதலே விண்வெளி பற்றிய ஆச்சரியங்களும் அதனைத் தெரிந்து கொள்ளும் ஆர்வமுமே தன்னை இத்துறைக்கு இட்டுச் சென்றுள்ளது எனக் கூறிய வான்மித்தா, அதில் தன்னை முழு ஈடுபாட்டுடன் செயல்பட வைத்ததாகத் தெரிவித்தார்.

தேசிய நிலையிலும் அனைத்துலக நிலையிலும் விண்வெளித் துறை தொடர்பான போட்டிகள், கலந்துரையாடல்கள், ஆய்வரங்கங்கள் போன்றவற்றில் கலந்து கொண்டார்.

தொடக்கத்தில் தோல்விகளை மட்டும் அவர் சந்திக்கவில்லை. பலர் அவரின் இலக்கு குறித்து எதிர்மறையான கருத்துக்களையும் கூறி வந்தனர். சற்றும் மனம் தளராத அவர், தனது முயற்சியிலிருந்து பின்வாங்கவில்லை.

தனது விரிவுரையாளர்களின் சில உதவிகள் அவருக்கு பெரும் நன்மையைக் கொண்டு வந்தது.

இப்பொழுது நாசாவில் விண்வெளி வீராங்கனை பயிற்சிக்கான வாய்ப்பினை வழங்கும் ஒரு போட்டியில் கலந்து மூன்றாவது கட்டத்திற்குச் சென்றுள்ளார்.

நான்காவது கட்டத்தையும் அவர் வெற்றிகரமாகக் கடந்து விட்டால் அடுத்த ஐந்து ஆண்டுகள் விண்வெளியில் 15 சவால்களை எதிர்கொள்வது தொடர்பான வீராங்கனைப் பயிற்சியை மேற்கொள்வார். அடுத்த மலேசிய விண்வெளி வீராங்கனை இவர் எனும் பெருமைக்குரியவராவார் வான்மித்தா ஆதிமூலம்.

தனது இலக்கு குறித்துக் கூறுகையில், நம் நாட்டுக் கொடி பொறித்த ஏவுகணையை மலேசிய மண்ணிலிருந்து பாய்ச்ச வேண்டும் என்பதே என் கனவு. அதனால் நம் நாட்டில் இந்தத் துறை மேலும் வளர்ச்சியைப் பதிவு செய்வதோடு புதிய வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். அதைத் தொடர்ந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியும் 13% வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என அவர் தெரிவித்தார்.

“இத்துறையில் மலேசியாவின் புதிய தொடக்கமாக இருக்க விரும்புகிறேன். எதிர்மறையான கருத்துகள் உங்களின் இலக்கைத் தாக்கலாம். விமர்சனங்கள் பல உங்களிடம் கூறப்படலாம். விடா முயற்சியுடன் இலக்கு நோக்கிப் பயணியுங்கள், போராடுங்கள். தோல்விகளைக் கண்டு துவண்டு விடாதீர்கள். தோல்விகளும் நிராகரிப்புகளும் இல்லாமல் வெற்றி அடைய முடியாது. தற்போதைய நடைமுறை எனச் சொல்லப்படக் கூடிய குறுகிய வட்டத்திற்குள் உங்களைப் புதைத்து விடாதீர்கள். ஒவ்வொரு நாளும் ஒரு புதிய வாய்ப்புதான் !”

இதில் தொடர்ந்து பயணிப்பதற்கு வான்மித்தாவிற்கு பொருளாதார ரீதியிலும் உதவித் தேவைப்படுகின்றது. இச்சூழ்நிலையில் கோத்தாராஜா நாடாளுமன்றத் தொகுதியின் தேசிய முன்னணி ஒருங்கிணைப்பாளரும் அத்தொகுதியின் மஇகா இளைஞர் பிரிவித் தலைவருமான கஜேந்திரன் அம்மாணவியை நேரில் சந்தித்து விளக்கம் பெற்றதோடு உதவியும் செய்துள்ளார்.