திருவனந்தபுரம்வ் திசம்பர் 18:-

நீதிமன்ற ஆணைப்படி சபரிமலையில் நவம்பர் 20 முதல் 5,000 பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் வாசு தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 பரவல் காரணமாக சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக குறிப்பிட்ட அளவு பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அதுவும் இணையத்தளத்தில் முன்பதிவு, கோவிட்-19 தொற்று கண்டிருக்கவில்லை என்ற பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு பல்வேறு நடவடிக்கை எடுத்திருந்தாலும் சபரிமலையில் ஊழியர்கள், போலீசார், அதிகாரிகள் என 200-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு ஆளானார்கள்.

இந்தநிலையில் தரிசனத்திற்கு கூடுதல் பக்தர்களை அனுமதிக்க ஆணையிடக் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் பிரமுகர் அஜய் தரையில், அய்யப்பா சேவா சமாஜம் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. அப்போது கேரள அரசு சார்பில், பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கூடாது என்றும், சபரிமலையில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் அர்ச்சகர்களுக்குத் தொற்று ஏற்பட்டால் கோவில் நடையை அடைக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இதனை ஏற்க மறுத்த உயர்நீதிமன்றம், சபரிமலை கோவில் தரிசனத்திற்கு வருகிற 20ஆம் தேதி முதல் நாள்தோறும் 5,000 பக்தர்களை அனுமதிக்க ஆணையிட்டது.

இதற்கிடையே திருவனந்தபுரத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் வாசு கூறுகையில், உயர்நீதிமன்றத்தின் ஆணையை ஏற்று சபரிமலையில் 20ஆம் தேதி முதல் அன்றாடம் 5,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். தற்போது சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் 3,000 பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

கூடுதல் பக்தர்களை அனுமதிப்பது குறித்து, தலைமைச் செயலாளர் தலைமையிலான வல்லுநர் குழு முடிவு செய்வார்கள். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 10,000 பக்தர்கள் அனுமதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதால், பக்தர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனையை கட்டாயப்படுத்தவும், சபரிமலையில் ஏராளமான ஊழியர்களுக்கு கோவிட்-19 தொற்றுப் பரவி வருவதால், ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

– நன்றி : மாலை மலர்