பாரத நாடு ஆங்கில ஆளுமையின்கீழ் அடிமைப் பட்டுக் கிடந்த பதினெட்டாம் நூற்றாண்டில் 1857 ஆம் ஆண்டில் வட இந்தியாவில் மீரட் நகரத்தில் தோன்றிய சிப்பாய்க் கழகத்தின் மூலமாக முதல் இந்திய விடுதலைப் போராட்டம் துவங்கியது .1858 ஆம் ஆண்டில் ஜான்சி ராணி என்றழைக்கப்பட்ட ‘இராணி லக்ஷ்மி பாய்’ ஆங்கிலேயப் படைகளுக்கு எதிராகப் புரட்சி செய்து  தானே போர்க்களம் புகுந்து போர்புரிந்து வரலாற்றில் இடம் பிடித்தாள் ‘.

இதுதான் நாம் படித்த வரலாறு. இந்த வரலாறு உண்மைதான். ஆனால் சில உண்மைகளைக் குழி தோண்டிப் புதைத்து விட்டு அதன்மீது இந்த வரலாறு எழுதப்பட்டிருக்கிறது.

இவை அத்தனையும் நடப்பதற்கு 77 ஆண்டுகளுக்கு முன்பாகவே நமது தமிழ்நாட்டில் ஆங்கிலேயரை எதிர்த்து ஆண் வேடம் தரித்து வாளெடுத்துப் போர் புரிந்த ஒரு தமிழச்சியின் வீர வரலாறு மறைக்கப் பட்டது.

ஆங்கிலேயரின் ஆளுமையை எதிர்த்து துடித்தெழுந்த நம் தமிழரின் முதல் விடுதலைப் போராட்ட வரலாறு மறக்கப்பட்டது.

தன் உடலை எரியூட்டிக்கொண்டு வெடிமருந்துக் கிடங்கினுள் புகுந்து அதை அழித்து ஆங்கிலப் படைகளின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்திய அனேகமாக உலகத்தின் முதல் பெண் தற்கொலைப் போராளியின் அடையாளம் அழிக்கப்பட்டது.

தனது அரசியைக் காட்டிக் கொடுக்க மறுத்ததற்காக ஆங்கிலேய வாளுக்குப் பலியாகி இன்றும் காக்கும் தெய்வமாகத் திகழுகின்ற இன்னொரு தமிழ் மறத்தியின் கதையும் கண்டுகொள்ளாமல் விடப்பட்டது.

வேலு நாச்சியார் என்ற வீரப் பெண்ணை மையமாகக் கொண்ட இந்தத் தமிழ்  மங்கைகளின் வீர வரலாற்றைத்தான்  நாம் இங்கே பார்க்கப் போகிறோம்.

தென் தமிழ்நாட்டில் இருக்கின்ற சிவகங்கையின் அரசி வேலு நாச்சியார். இந்த வீர மங்கைதான் ஆங்கிலேயரை எதிர்த்துப் போருக்குக் கிளம்பிய முதல் இந்தியப் பெண்ணரசியாவார். தனது அன்புக் கணவரை நயவஞ்சகமாகக்  கொன்று நாட்டைப் பறித்துக்கொண்ட  ஆங்கிலேயரைப் பழி வாங்குவதற்காக எட்டு ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டு இறுதியில் எடுத்த சபதத்தை முடித்து வீரமங்கையானவர் வேலுநாச்சியார்.

இராமநாதபுரம் அரசாட்சியின் அரசர் செல்லமுத்து சேதுபதி. அவரின் அரசியார் முத்தாத்தாள். 1730 ஆம் ஆண்டு  சனவரி 3 ஆம் நாளில் தாங்கள் பெற்றெடுத்த பெண்மகவுக்கு வேலு நாச்சியார் என்று பெயரிட்டார்கள். அரச இணையருக்கு வேறு குழந்தைகள் இல்லாததால் வேலு நாச்சியார் ஒரு ஆண் மகன் போலவே வளர்க்கப்பட்டார். போர்க்கலைகள் பயிற்றுவிக்கப் பட்டார். சிறந்த கல்வி கற்றுவிக்கப் பெற்றார். ஏழு மொழிகளுக்கும் மேல் கற்று பன்மொழி வித்தகரானார் வேலுநாச்சியார்.

1746 ஆம் ஆண்டில் தனது 16 வது வயதில் அப்போதைய சிவகங்கை நாட்டின் மன்னராயிருந்த ‘முத்து வடுகநாத துரை’யை மணந்தார் வேலு நாச்சியார். மன்னருக்கு நல்ல துணைவியாக மட்டுமல்லாமல் சிறந்த நண்பராகவும் ஆலோசகராகவும் திகழ்ந்தார் அவர்.

இராமநாதபுரம் மன்னரின் படையில் தளபதியாகப் பணி செய்தவர் ‘உடையார் சேர்வை’ என்று அழைக்கப்பட்ட மூக்கையா பழனியப்பன். இவரின் புதல்வர்கள் ‘பெரிய மருது ‘ என்றழைக்கப்பட்ட வெள்ளை மருதுவும் ‘சின்ன மருது ‘ என்றழைக்கைப்பட்ட மருது பாண்டியனும் சூரங்கோட்டை என்னும் இடத்தில் இருந்த இராமநாதபுரத்தின் பாசறையில் படைப்பயிற்சி பெற்றார்கள்.

இவர்களின் வீரச் செயல்களைக் கேள்வியுற்ற மன்னர் முத்து வடுகநாதர் இருவரையும் தனது படைத்தளபதிகளாக்கிக் கொண்டார். தாண்டவராயன் பிள்ளை என்ற அறிவாளர் ஒருவர் மன்னரின் அமைச்சராக இருந்தார்.

18 ஆவது நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில் தமிழ்நாடு பல்வேறு ஆதிக்கச் சக்திகளின் பிடியில் சிக்கித் தவித்தது. முகலாயரும் மராட்டியர்களும் ஆங்கிலேயரும் பிரெஞ்சுக்காரர்களும் இவர்களுடன் உள்ளூர் பாளையக் காரர்களும் கூட அதிகாரத்துக்கும் ஆட்சி உரிமைக்கும் அடித்துப் பிடித்துக்கொண்டிருந்தார்கள்.

சிவகங்கையில் தத்தமது வியாபார உரிமைகளை நிலை நாட்டுவதில் ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையில் சச்சரவு இருந்து வந்தது. ஆங்கிலேயரின் எதேச்சதிகாரப் போக்கு பிடிக்காத சிவகங்கை மன்னரோ பிரெஞ்சுக்காரர்களைத் தேர்வு செய்துவிட இந்தச் செயல் ஆங்கிலேயருக்குக் கோபத்தை உண்டாக்கியது. விளைவாக அவர்கள் சிவகங்கை மீது போர் தொடுத்தார்கள்.

கர்னல் ஜோசப் ஸ்மித் – லெப்.கர்னல் பான்ஜோர் தலைமையில் ஆங்கிலப் படைகள் சிவகங்கையைச் சுற்றி வளைத்தன. மருது சகோதரர்களின் தலைமையிலான சிவகங்கைப் படைகள் வீரத்துடன் ஆங்கிலப்படைகளை எதிர்த்து நின்றன. இந்தப் போரில் வேலுநாச்சியார் தாமே போர்க்களத்துக்கு வந்து ஆங்கிலேயரை எதிர்த்து நேருக்கு நேர் நின்று போரிட்ட நிகழ்வை வரலாற்றாசிரியர்கள் வியந்து புகழ்கிறார்கள்.

ஆனாலும் முடிவோ துயரமானது. ஆங்கிலேயர்கள் அரசரை ஏமாற்றி போர்க்களத்தின் முன்னணிக்கு வரவழைத்து வஞ்சகமாகக் கொன்றார்கள். அதன்பின் சிவகங்கைப்படை அழிக்கப்பட்டது.

வேலு நாச்சியார் மகள் வெள்ளச்சி நாச்சியாருடனும் நம்பிக்கைக்குகந்த அமைச்சர் தாண்டவராயருடனும் தப்பிச்சென்று மைசூர் சுல்தானின் ஆளுகைக்குட்பட்டிருந்த திண்டுக்கல்லில் தஞ்சம் புகுந்தார். சிறிது காலம் கழித்து மருது சகோதரர்களும் அரசியுடன் இணைந்து கொண்டார்கள். வேலு நாச்சியாரைத் தொடர்ந்து வந்த ஆங்கிலப்படைகள் அரியக்குறிச்சி என்ற கிராமத்தின் அருகே சாலையில் எதிர்ப்பட்ட இளம் பெண்ணை வழிமறித்து அரசி சென்ற வழி குறித்து விசாரித்தார்கள். அரசி சென்ற வழியை அறிந்திருந்த அந்தப்பெண் பதில் சொல்ல மறுத்தாள். உடையாள் என்ற பெயர் கொண்ட நாட்டுப்பற்று மிகுந்த அந்தப்பெண்ணின் தலையை வெட்டி வீழ்த்தினார்கள் வெள்ளைக்காரப் படையினர்.

மைசூர் அரசன் திப்பு சுல்தானிடம் உதவி கோரினார் வேலு நாச்சியார். வேலுநாச்சியாரின் தெளிவான உருது மொழிப் பேச்சினைக்கேட்ட திப்பு வியந்து போனான். திப்புவின் ஆதரவோடு வேலுநாச்சியார் விருப்பாச்சியிலும் திண்டுக்கல் அருகேயுள்ள அய்யம்பாளையத்திலும் மறைந்து வாழ்ந்தார்.

சிவகங்கை நாடு ஆங்கிலேயரின் கூட்டாளியான ஆற்காடு நவாப்பின் கைகளுக்கு மாற்றப்பட்டது. ஆனால் சிவகங்கை மக்கள் நவாப்புக்கு அடிபணியவோ வரி செலுத்தவோ மறுத்தார்கள்.அமைச்சர் தாண்டவராயர் மூலமாக சிவகங்கை குடிமக்கள் ராணி வேலு நாச்சியாரைத் தொடர்பு கொண்டார்கள்.

நாட்டையும் அன்புக் கணவரையும் இழந்து ஏழு ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டிருந்த நாச்சியாரின் நெஞ்சத்தில் ஆங்கிலேயரைப் பழிவாங்க வேண்டும் என்ற வஞ்சம் தணலாகக் கனன்று கொண்டிருந்தது. சிவகங்கையின் மக்கள் அரசிக்குத் துணை நின்றார்கள்.வென்றேயாக வேண்டும் என்ற வெஞ்சினத்தோடு கூடிய சிவகங்கைப் படையொன்று வீறு கொண்டு எழுந்தது.

சுல்தான் திப்பு தனது பங்காக 5000 குதிரை வீரர்களையும் 5000 தரைப் படையினரையும் பீரங்கிப் படையின் ஒரு பிரிவையும் அனுப்பி வைத்தான்.

1780 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 ஆம் நாளில் மருது பாண்டியரின் தலைமையின் கீழ் சிவகங்கை நோக்கிப் புறப்பட்ட நாச்சியாரின் படை மதுரையை வென்று வழியெங்கும் தடைகளைத் தகர்த்து சிவகங்கைக்குள் நுழைந்தது.

இந்தப் போரில் சிவகங்கைப் படைகள் நிகழ்த்திய வீரச் செயல்களைப் புகழ்ந்து பாடும் நாட்டுப் பாடல்களை சிவகங்கையின் கிராமப் பகுதிகளில் இன்றும் நாம் கேட்கலாம்.

தனக்காக உயிர் நீத்த கன்னிப்பெண் உடையாளின் நினைவாக ராணி வேலுநாச்சியார் ‘கொல்லங்குடி’ என்ற இடத்தில் வீரக்கல் ஒன்றினை நட்டு  வைரக்கல் பதித்த தனது திருமணச் சங்கிலியை அதற்கு மாலையாக அணிவித்தார்.தன்னைக் காக்கும் கடவுளாக உடையாளை ஏற்றுக்கொண்ட அரசி உடையாளுக்கு நித்திய பூஜைகள் நடத்த ஏற்பாடுகள் செய்தார்.

‘வெட்டுடையாள்  காளி’ என்று அந்தப் பெண் தெய்வம் இப்போது சிவகங்கைப் பகுதி மக்களின் காக்கும் தெய்வமாக பெரும் புகழோடு அருளாட்சி செய்து வருகிறது. இன்னும் சிறப்பாக ‘ உடையாள்’ என்ற பெயரிலே பெண்களின் படையணி ஒன்றினையும் உருவாக்கினார் வேலு நாச்சியார். ‘குயிலி’ என்ற இன்னொரு வீர மங்கை இந்தப் படையணியின் தலைவியாக இருந்தாள் .

ஒவ்வொரு ஆண்டும் சிவகங்கை அரண்மனையில் நவராத்திரியும் விஜய தசமியும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கமாயிருந்தது. அப்படியான ஒரு கொண்டாட்டத்துக்காக அரண்மனை பரபரப்பாக இருந்த ஒரு நேரத்தில் குயிலியின் பெண்கள் படையணி சாதாரண மக்கள் போல உள்ளே நுழைந்தது.

தனது படையினர் ஒரு பக்கம் கூட்டத்துக்குள் குழப்பம் ஏற்படுத்தி காவலர்களின் கவனத்தைத் திசை திருப்ப மறுபக்கம் குயிலி தன உடலின் மீது தீயைக் கொளுத்திக் கொண்டு வெள்ளையர்கள் சேமித்து வைத்திருந்த வெடி மருந்துக் கிடங்கினுள் புகுந்து வெடிக்கச் செய்து அழித்து தானும் சாம்பலானாள். இவ்வாறாக உலகின் முதல் பெண் தற்கொலைப் போராளியானாள் குயிலி.

வெடிமருந்துகளின் அழிவு வெள்ளையர் படைகளின் முன்னேற்றத்தைத் தாமதப் படுத்தியது.மருது சகோதரர்களின் படை ஆங்கிலேய மற்றும் நவாப்பின் படைகளை வென்று அவர்களை சிவகங்கையிலிருந்து துரத்தியடித்தது.தனது 50 ஆவது வயதில் அரசி வேலு நாச்சியார் தனது கணவரைக் கொன்ற ஆங்கிலேயரை வென்று சபதத்தை நிறைவேற் றினார்.

என்றாலும் நாடு முழுவதையும் ஆக்ரமித்துக்கொண்ட ஆங்கிலேயருக்கு சிவகங்கையை விட்டு விட மனமில்லை. தங்களுக்கு முறைப்படி வரி செலுத்தி வந்தால் தாங்கள் வேலு நாச்சியாரின் ஆட்சியை ஏற்றுக் கொள்வதாக ஒரு சமாதான உடன்படிக்கைக்கு தயாரானார்கள். சிவகங்கையின் நலன் கருதி அந்த உடன்படிக்கையை ஏற்றுக்கொண்ட பெரிய மருது தனது சொந்தச் செல்வாக்கின் மூலமாக ஐந்து லட்சம் ரூபாய் பணத்தைத் திரட்டிக் கொடுத்து வேலு நாச்சியாரை மீண்டும் சிவகங்கையின் அரசியாக்கினார்.ஆங்கில ஏகாதிபத்தியத்தின் கீழ் சிவகங்கை தனி நாடானது.

அரசியார் வேலு நாச்சியார் பெரிய மருதுவை தனது தளபதி யாகவும் சின்ன மருதுவை அமைச்சராகவும் நியமித்துக் கொண்டார்.அடுத்த சில காலங்களில் சிவகங்கையின் நிர்வாகத்திலும் முன்னேற்ற நடவடிக்கைகளிலும் பெரிய மருதுவின் பங்கு பெரிய அளவிலானதாகயிருநதது.

ஏரிகளும் குளங்களும் வெட்டுவிக்கப் பட்டன. தஞ்சாவூரிலிருந்து திறமை வாய்ந்த வேளாண்மை விற்பன்னர்கள் அழைத்து வரப்பட்டார்கள். அவர்களுக்கு விவசாய நிலங்கள் வழங்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்டது. இதனால் சிவகங்கையில் வேளாண் தொழில் வளர்ந்தது.

வேலு நாச்சியாரின் மகளான வெள்ளச்சி நாச்சியார் சக்கந்தி கிராமத்தைச் சேர்ந்த ‘வேங்கை உடையணத் தேவரை ‘ மணந்தார்.பெரிய மருதுவின் உதவியோடு 10 ஆண்டுகள் ஆட்சி செய்த வேலு நாச்சியார் 1789 ஆம் ஆண்டில் ஆட்சிப் பொறுப்பை மகளிடம் ஒப்படைத்தார்.

தனது இறுதிக் காலத்தில் மிகப்பெரிய துயர நிகழ்வுளைச் சந்தித்தார் வேலு நாச்சியார்,தனது மகளையும் பேத்தியையும் அடுத்தடுத்துப் பறிகொடுத்தார். இந்தப் பேரிழப்புகள் அவரது உடல் நலத்தைப் பெரிதும் பாதித்தது.

வாழ்நாள் முழுவதும் சவால்களையும் போராட்டங்களையுமே சந்தித்து அவற்றை துணிச்சலோடு எதிர்த்து நின்ற வீரப் பெண்ணரசி வேலு நாச்சியார் இறுதியாக 1796 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் நாள் மீளாத்துயில் கொண்டு அமைதி பெற்றார்.

இன்றும் சிவகங்கையின் நாட்டுப்புற மக்கள் தங்களின் பண்டிகைக் கொண்டாட்டங்களின்போது வேலு நாச்சியாரின் வீர வரலாற்றினைப் பாடி மகிழ்கிறார்கள்.

பிற்காலத்தில் மருது பாண்டியர் ஆங்கிலேயருக்கு எதிராகச் சுதந்திரப் பிரகடனம் செய்ததும் பிரமாண்ட  ஆங்கிலப்படை சிவகங்கையைச் சுற்றி வளைத்ததும் காட்டுக்குள் புகுந்த மருது பாண்டியர்கள் அங்கிருந்து கொரில்லாப் போர் புரிந்ததும் தாங்கள் நிர்மாணித்த ‘காளையார்கோவில்’ கோபுரத்தைக் குறிவைத்த ஆங்கிலப் பீரங்கிகளை அமைதிப் படுத்துவதற்காக ஆங்கிலேயரிடம் சரணடைந்ததும் இறுதியாக மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்டதும்  நாம் தனியாகப் பதிவு செய்ய வேண்டிய மற்றுமொரு தமிழர் வீர வரலாறு.

– நன்றி : மதிவாணன்