கப்பாளா பத்தாஸ், டிச.28- இந்திய திரையுலகின் பின்னணி பாடகரான பத்மபூஷன் எஸ். பி. பாலசுப்ரமணியத்தின் மறைவு இன்னும் பலரின் மனங்களில் ஏக்கத்தை விதைத்துள்ளது. ஒரு மகத்தான கலைஞன் இந்த பூவுலகை விட்டு பிரிந்திருக்கும் வேளையில், இன்னமும் பாடும் நிலாவுக்காக பல்வேறு இடங்களில் நினைவஞ்சலிகளும், கீதாஞ்சலிகளும் செலுத்தப்பட்டு வருகின்றன. அத்தகைய ஒரு கீதாஞ்சலி கடந்த சனிக்கிழமை ( டிசம்பர் 26 ஆம் தேதி ) பினாங்கு கப்பாளா பத்தாசில் நடைபெற்றது.

கப்பாளா பத்தாஸ் இந்தியர் முன்னேற்ற இயக்கம், புதிய தென்றல் இசைக்குழு மற்றும் ஜனனி ஆர்ட்ஸ் இசைக்குழு இணைந்து இந்த கீதாஞ்சலி நிகழ்ச்சியை நடத்தியது. பினாங்கு மாநிலத்தில் புகழ்பெற்ற இசை கலைஞர்கள் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மறைந்த எஸ். பி. பாலசுப்ரமணியத்தின் பாடல்களை பாடி வந்திருந்தவர்களை மகிழ்வித்தனர். பலரின் மனங்களில் நீங்கா இடம்பிடித்த எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு ஒரு கீதாஞ்சலில் நடத்தப்பட வேண்டும் என தம்மிடம் ஜனனி ஆர்ட்ஸ் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஒரு சிறப்பான நிகழ்ச்சியை நடத்த தாம் ஒப்புக் கொண்டதாக கப்பாளா பத்தாஸ் இந்தியர் முன்னேற்ற இயக்கத்தின் தலைவரும் , அத்தொகுதியின் மைபிபிபி கட்சியின் தலைவருமான மு.வேலாயுதம் தெரிவித்தார்.

இந்திய திரையிசையில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடி ஆறு தேசிய விருதுகளை வென்ற பாலசுப்ரமணியத்தை நினைவுக்கூறும் ஒரு நிகழ்ச்சி வட மாநிலத்தில் நடத்தப்பட வேண்டும் என தாம் ஆசைக் கொண்டிருந்ததாகவும் அவர் கூறினார். அதனை நிறைவேற்றுவதற்காக தம்முடன் இணைந்து ஒத்துழைத்த புதிய தென்றல் மற்றும் ஜனனி ஆர்ட்ஸ் இசைக்குழுவுக்கு அவர் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குறித்த தங்களின் நினைவலைகளையும் பகிர்ந்துக் கொண்டனர். நிகழ்ச்சியின் ஊடே, எஸ்.பி. பாலசுப்ரமணியம் குறித்த பல்வேறு தகவல்களை அறிவிப்பாளர்கள் பகிர்ந்து கொண்டது வந்திருந்தவர்களின் மனதைக் கவர்ந்தது. பினாங்கு மாநில எழுத்தாளர் சங்கத் தலைவரும் மக்கள் ஓசை நாளிதழின் நிருபருமான செ. குணாளன், பாடும் நிலாவுக்காக தமது கை வண்ணத்தில் கவிதை ஒன்றையும் படைத்தார். வந்திருந்த பிரமுகர்களுக்கு யமுனாஸ் கேட்டரிங் சிறப்பான உணவையும் வழங்கியது.