லண்டன், செப்.7-

ஆட்டக்காரர்களை வாங்கும் நடவடிக்கைகளில் மென்செஸ்டர் யுனைடெட் விரைந்து செயல்பட்டதால் அதிகமான பணத்தை மிச்சப்படுத்த முடிந்ததாக அதன் நிர்வாகி ஜோசே மொரின்ஹோ தெரிவித்துள்ளார்.

பிரேசிலின் நெய்மார்,. பார்சிலோனா கிளப்பில் இருந்து வெளியேறி, 20 கோடி பவுண்ட் தொகையில் ( உலகில் ஓர் ஆட்டக்காரருக்கு வழங்கப்பட்ட உச்ச பட்சத் தொகை ) பிரான்சின் பாரிஸ் செயின் ஜெர்மைன் கிளப்பில் இணைந்தப் பின்னர் சந்தையில் ஆட்டக்காரர்களின் விலை கிடுகிடுவென உயர்ந்ததாக மொரின்ஹோ தெரிவித்தார்.

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியின் நடப்பு பருவத்தை முன்னிட்டு 13 கோடி பவுண்ட் தொகைக்கு எவெர்டன் கிளப்பில் இருந்து ரொமாலு லுக்காகூ உட்பட நெமாஞ்சா மாத்திச், விக்டர் லின்டாலோப்பை மென்செஸ்டர் யுனைடெட் ஒப்பந்தம் செய்தது. அதன் பின்னரே நெய்மாரை வாங்க பாரிஸ் செயின் ஜெர்மைன் அதிக விலையைக் கொடுக்க முன் வந்தது.

மென்செஸ்டர் யுனைடெட் குறி வைத்திருந்த ஆட்டக்காரர்களுக்கு காத்து கொண்டிருந்தால் ஆட்டக்காரர்களின் விலை கற்பனைக்கு எட்டாத நிலையில் இருந்திருக்கும் என மொரின்ஹோ தெரிவித்தார். குறிப்பாக ரொமேலு லுக்காகூவுக்கு 15 கோடி பவுன்ட் தொகையை வழங்கும் நிலை ஏற்பட்டிருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

தற்போது ஆட்டக்காரர்களை விற்க சரசரி 10 கோடி பவுன்ட் தொகையை ஒரு கிளப் எதிர்பார்க்கிறது என்று மொரின்ஹோ தெரிவித்தார்.