புதுடில்லி, சனவரி 26:-

இந்தியாவின் குடியரசு நாள் சனவரி 26 ஆம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க எத்தனை நாட்கள் ஆனது என்பது குறித்த வரலாற்று தகவல்கள்.

இந்தியக் குடியரசு நாள் என்பது மக்களாட்சி அடிப்படையில் ஒரு நாடு தங்கள் சொந்த சட்டதிட்டத்தின் கீழ் செயல்படுவதை குறிக்கும் நாளாகும். இந்தியாவில் 1950-ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் சனவரி 26 ஆம் தேதி குடியரசு நாள் கொண்டாடப்படுகிறது. 

இந்திய நாட்டிற்கானச் சட்டதிட்டங்கள் இயற்றப்பட்டு 1950 சனவரி 26 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதுவே குடியரசு நாளாகவும் கொண்டாடப்படுகிறது. டாக்டர் அம்பேத்கர் 2 ஆண்டுகள் 11 மாதங்கள் பணியாற்றி இந்திய அரசியலமைப்பு சட்டத்தைத் திறம்பட இயற்றித் தந்தார். 1946  திசம்பர் 9 ஆம் தேதி இந்திய அரசியல் நிர்ணய மன்றத்தின் முதல் கூட்டம் நடந்தது. 1947 ஆகஸ்டு 29 ஆம் தேதி அம்பேத்கர் தலைமையில் அரசமைப்பு சட்ட வரைவுக் குழு உருவாக்கப்பட்டது. 

வரைவுக் குழு உருவாக்கிய இந்திய அரசமைப்க்ச் சட்டத்தை அரசமைப்பு நிர்ணய மன்றம் 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி ஏற்றுக்கொண்டது. இந்திய அரசியலமைப்பு உலகின் மிகப்பெரிய மக்களாட்சி அரசியலமைப்பு ஆகும். இந்தியச் சட்டத்தில் 448 பிரிவுகள்உள்ளன. இவை ஆங்கிலத்திலும் இந்தியிலும் எழுதப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் குடியரசு நாள் இந்தியாவில் மூன்று நாட்கள் கொண்டாடப்பட்டது. குடியரசு நாளில் ஆயுதப்படை அணிவகுப்பு 1955-ஆம் ஆண்டில் தான் முதன் முதலில் நடந்தது. டெல்லி இராஜ்பாத்தில் முதல் அணிவகுப்பு பிரமாண்டமாக நடத்தப்பட்டது.

பாரதரத்னா, பத்மபூசண், கீர்த்தி சக்ரா போன்ற முக்கியமானப் பல தேசிய விருதுகள் குடியரசு நாளன்றூ வழங்கப்படுகிறது. 

போர்க் காலங்களில் வீர தீரச் செயல்களில் ஈடுபட்டதற்காக பரம் வீர் சக்ரா, மகா வீர் சக்ரா, வீர் சக்ரா ஆகிய விருதுகளும், போர் இல்லாத காலங்களில் வீர தீர செயல்களில் ஈடுபட்டதற்காக அசோகச் சக்ரா, கீர்த்தி சக்ரா, சௌர்ய சக்ரா ஆகிய விருதுகளும் இந்திய அரசால் வழங்கப்படுகின்றன.

குடியரசு நாள் விழா அணிவகுப்பு டெல்லி இராஜபாதையில் இருக்கும் குடியரசு மாளிகையில் தொடங்கி, இந்தியா கேட் வரையில் நடக்கும்.

கோவிட்-19 கட்டுப்பாடு காரணமாக இந்த ஆண்டு விஜய் சவுக் முதல் நேஷன்ல் ஸ்டேடியம் வரை மட்டுமே அணிவகுப்பு என மாற்றப்பட்டது.

குடியரசு நாளில் இந்தியப் பாதுகாப்பு படைகளின் தலைமைத் தளபதியாக இருக்கும் இதிந்தியக் குடியரசுத் தலைவர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார்.

குடியரசு நாள் அணிவகுப்பு இந்திய வான்படையின் அணிவகுப்புடன் முடிவுக்கு வரும். விஜய் சவுக்கில் குடியரசு நாள் அணிவகுப்பில் கலந்துகொண்ட முப்படை வீரர்களும் தங்கள் முகாமுக்கு திரும்பும் பாசறை திரும்புதல் நிகழ்வு மாலையில் நடைபெறுகிறது. 

நன்றி : தினத்தந்தி