டேராடூன் | பிப்பரவரி 07:-

இந்தியா, உத்தரகாண்ட மாநிலம் சமோலி மாவட்டத்தில் அமைந்துள்ள நந்தாதேவி மலைப்பகுதியில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.

அருகில் உள்ள ரேனி கிராமத்தில் ரிஷிகங்கா மின்நிலையம் அருகே பெரிய அளவில் பனிப்பாறைகள் சரிந்து, வேகமாக உருகியதால் தவுலிகங்கா நதியில் வெள்ளப்பெருக்கெடுத்து ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை சேதமடைந்துள்ளது.

திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆற்றங்கரையோரத்தில் உள்ள பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதாகவும், 150-க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

நதியில் வெள்ளப் பெருக்கு காரணமாக தேசியப் பேரிடர் மீட்புப் படை, மாநிலப் பேரிடர் மீட்புப் படை மற்றும் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் தேடல் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன.

வெள்ளப்பெருக்கு காரணமாக ரிஷிகங்கா மின் திட்டம் பெரும் சேதமடைதுள்ளது. அத்திட்டத்தில் பணி புரிந்து வந்த 150 பேர் வெள்ளப்பெருக்கில் சிக்கி மாயமாகி இருப்பதாக அஞ்சப்படுகிறது. மேலும், ஏராளாமான உயிரிழப்புகளும் நிகழ்ந்திருக்கலாம் என்றும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கு காரணமாக ரிஷிகேஷில் படகு பயணம் நிறுத்தப்பட்டது. ஹரித்வாரிலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.