சென்னை:
டி.டி.வி. தினகரன் இன்று தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தார். அப்போது தற்போதுள்ள அரசியல் சூழ்நிலைகளை விளக்கியதுடன், முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் கூறியதாவது:-
எடப்பாடி பழனிசாமி அணியில் எங்கள் ஸ்லீப்பர் செல் எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். தலைமை நிலைய செயலாளார் பதவியை ஜக்கையன் கேட்டார், திடீரென அணி மாறிவிட்டார். எதிர் தரப்பினர், மிரட்டுவதாக ஜக்கையன் எம்.எல்.ஏ என்னிடம் தெரிவித்தார். ஒருவர்தான் அணி மாறியுள்ளார்; பதிலுக்கு மூன்று பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். குதிரை பேரம் இன்றும் நடந்து கொண்டிருக்கிறது.
செப்.5ல் நடந்த கூட்டத்தில் முதல்வருக்கு போதிய ஆதரவு இல்லை என்பது தெரியவந்தது. முதல்வரை மாற்றக்கோரி எம்எல்ஏக்கள் அளித்த கடிதம் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம் வலியுறுத்தினோம். பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட ஆளுநரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. விரைவில் நல்ல முடிவை எடுப்பதாக ஆளுநர் தெரிவித்தார். பழனிசாமி, பன்னீர்செல்வத்தை பதவி நீக்கம் செய்யும் வரை நாங்கள் ஓயமாட்டோம்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.