அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > நாந்டேஸ் பொது ஸ்குவாஷ் போட்டி : உலக ஜூனியர் வெற்றியாளரை வீழ்த்தி சிவசங்கரி அதிரடி
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

நாந்டேஸ் பொது ஸ்குவாஷ் போட்டி : உலக ஜூனியர் வெற்றியாளரை வீழ்த்தி சிவசங்கரி அதிரடி

நாந்டேஸ், செப், 8-

பிரான்ஸில் நடக்கும் நாந்டேஸ் பொது ஸ்குவாஷ் போட்டியில் உலக ஜூனியர் வெற்றியாளரான ரோவன் ரேடாவை மலேசியாவின் இளம் வீராங்கனையான எஸ்.சிவசங்கரி வீழ்த்தி அதிரடி படைத்தார். மலேசியாவில் நடந்த சீ போட்டியில் 2 தங்கப்பதக்கங்களை வென்ற சிவசங்கரி, முதல் 2 செட்களில் 3-11, 9-11 என்ற புள்ளிகளில் ரோவன் ரேடாவிடம் தோல்வி கண்டார். இதனால் அவர் வெற்றி பெறுவது கடினமென கணிக்கப்பட்ட நிலையில் 3ஆவது சுற்றை பலத்த போராட்டத்திற்குப் பிறகு 11 – 9 என்ற புள்ளிகளில் கைப்பற்றினார்.

4ஆவது செட்டை 11-4 என்ற புள்ளிகளில் சிவசங்கரி வென்றார். இதனால் ஆட்டம் 2 என்ற புள்ளிகளில் சமநிலையில் இருந்தது. வெற்றியை நிர்ணயிக்கும் 5ஆவது செட்டில் சிவசங்கரி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி 11-6 என்ற புள்ளிகளில் எகிப்தைச் சேர்ந்த ரோவன் ரேடாவை வென்றார்.

இந்த வெற்றியின் மூலம் அடுத்த காலிறுதிச் சுற்றில் இங்கிலாந்தின் மில்லி டொம்லின்னை சந்திக்கின்றார். தொடக்கத்தில் சிறந்த ஆட்டத்தை என்னால் வெளிப்படுத்த முடியவில்லை. ஆட்டத்தில் சில தவறான அணுகுமுறையை கையாண்டதால் 2 செட்களில் தோல்வி காண வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இச்சூழ்நிலையில் முன்னேறிச் செல் என என்னிடமே நான் சொல்லிக் கொண்டேன். அப்போது ரோவன் ரேடா சோர்வாகக் காணப்பட்டார். இந்த சந்தர்ப்பத்தை எனக்கு சாதகமாக்கிக் கொண்டேன் என சிவசங்கரி செய்தியாளர்களிடம் கூறினார். இந்த வெற்றி மிகப் பெரிய மகிழ்சியைத் தந்துள்ளது. உலக ஜூனியர் வெற்றியாளரை வீழ்த்தியதால் மில்லி டொம்லின்னை எளிதாகக் கருதிவிட முடியாது. ஸ்குவாஷில் சிறந்த 30 ஆட்டக்காரர்களில் அவரும் ஒருவர் என்றார் சிவசங்கரி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன