ஈப்போ | பிப்பரவரி 22

அண்மையில் பொங்கல் விழா குறித்த சர்ச்சைக்குத் தீர்வு கொடுக்கும் வகையில் அது சமய விழா அல்ல; தனித்துவமானத் தமிழர் திருநாள் எனத் திட்டவட்டமாகக் கூறிய ம.இ.கா. தேசிய இளைஞர் பிரிவின் தமிழ் மொழிக் குழுவின் தலைவர் தியாகசீலன் கணேசனுக்கு தங்களின் பாராட்டுக்களையும் நன்றியையும் பேரா தமிழர் முன்னேற்ற மேம்பாட்டுச் சங்கத்தின் தலைவர் புகனேசுவரனும் ஈப்போ குறிஞ்சித்திட்டுத் தமிழ்க்கழகத்தின் துணைச் செயலாளர் நந்தகுமாரனும் தெரிவித்தனர்.


இப்படி இருக்கையில், கல்வித் துணை அமைச்சரின் சிறப்பு அதிகாரியும் ம.இ.காவின் உறுப்பினருமான குணசீலன் நரசம்புவின் கடந்த பிப்பரவரி 17ஆம் நாள் வெளிவந்த பத்திரிகை செய்தியில், தமிழ் மொழிக் காப்பகத்தை நடப்பு அரசாங்கம், குறிப்பாக கல்வி அமைச்சால் அங்கீகரிக்கப்படவில்லை எனவும் அது வெளியிட இருக்கும் பொங்கல் கையேட்டுக்கும் அதே நிலை தான் எனக் கூறியிருப்பது மலேசியத் தமிழர்களிடையே குழப்பத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளதாக அவர்கள் கூறினர்.


இவ்விவகாரம் குறித்து நடப்பு அரசாங்கத்தின் இந்தியர் நிகராளியாக இருகின்ற மலேசிய இந்தியர் காங்கிரஸ் ம.இ.கா. தேசிய இளைஞர் பிரிவின் தமிழ் மொழிக் குழுவுக்கு 3 கேள்விகளை முன் வைக்கிறோம்:

  1. மலேசியத் தமிழ் மொழிக் காப்பத்தின் தற்போதைய நிலை என்ன ?
  2. 2. கல்வித் துணை அமைச்சரின் சிறப்பு அதிகாரி மலேசியத் தமிழ்மொழிக் காப்பகத்தை அரசு அங்கீகரிக்க வில்லை எனக் கூறியதற்கான காரணம் என்ன ? பின்புலம் என்ன ?
    3. மலேசித் தமிழ் மொழிக் காப்பகம் தயாரித்துள்ள பொங்கல் கையேடு எப்போது வெளிவரும் ?

மலேசியத் திருநாட்டிலே அரை நூற்றாண்டுக்கும் மேலாக இதுபோன்ற கல்வி அமைச்சின் கீழ் அங்கீகாரம் பெற்றத் தமிழ் மொழிக் காப்பகம் என ஒன்று நமக்கு இருந்ததில்லை.

தெய்வாதீனமாக நமக்கு அமைக்கப்பட்டத் தமிழ் மொழிக் காப்பகத்தை இனம் மொழி பண்பாட்டுத் தரவுகளைக் காக்கும் அரணாக நம் மலேசியத் திருநாட்டில் இனி வரக் கூடிய காலங்களிலும் எந்த வித தடையுமின்றி நிலைத்திருக்கச் செய்ய வேண்டும் என குறிஞ்சித்திட்டுத் தமிழ்க்கழகமும் பேரா தமிழர் முன்னேற்ற மேம்பாட்டுச் சங்கமும் கேட்டுக் கொண்டன.