பியூனோஸ் அயர்ஸ், செப். 8 –

2018 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்துப் போட்டி, கால்பந்து உச்ச நட்சத்திரம் லியோனெல் மெஸ்சியுன் அவரின் அணியான அர்ஜெண்டினாவும் இடம்பெற முடியாத சூழல் உருவாகலாம் என கணிக்கப்படுகிறது.

தென் அமெரிக்க மண்டலத்துக்கான தகுதிச் சுற்றில் அர்ஜெண்டினா தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது.

ஆக கடைசியாக செவ்வாய்கிழமை நடந்த ஆட்டத்தில் அர்ஜெண்டினா, 1 – 1 என்ற கோலில் வெனிசூலாவுடன் சமநிலைக் கண்டது. அர்ஜெண்டினாவின் இத்தகைய ஆட்டத்தரம் அச்சுறுத்தும் வகையில் இருப்பதாக அந்த அணியின் முன்னாள் பயிற்றுனர் செசர் லுயிஸ் மெனோட்டி தெரிவித்துள்ளார்.

அர்ஜெண்டினா தேசிய கால்பந்து அணியில் லியோனெல் மெஸ்சியின் ஆற்றலை எந்த ஒரு பயிற்றுனரையும் இதுவரை சரியாக பயன்படுத்தி கொண்டதில்லை என அவர் தெரிவித்துள்ளார். வெனிசூலாவுக்கு எதிராக தாம் விளையாடிய காலத்தில் அர்ஜெண்டினா எதிரணியின் இடத்தில் 7 – 0 என்ற கோல்களிலும், சொந்த அரங்கில் 11 – 0 என்ற கோல்களிலும் வெற்றி பெற்றிருந்ததாக செசர் லுயிஸ் தெரிவித்துள்ளார்.

வெனிசூலாவுக்கு எதிராக ஒரு காலத்தில் 18 கோல்களை அடிக்கும் திறன் பெற்றிருந்த அர்ஜெண்டினா அணி தற்போது கோல் அடிப்பதில் திணறி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். தென் அமெரிக்க மண்டலத்துக்கான தகுதிச் சுற்றில் 309 நிமிடங்கள் கோல் அடிக்க முடியாமல் தடுமாறி அர்ஜெண்டினா ஆக கடைசியாக வெனிசூலா ஆட்டக்காரர் போட்ட சொந்த கோலால் ஒரு கோலைப் பெற்றிருப்பதையும் செசர் லுயிஸ் சுட்டி காட்டினார்.

அர்ஜெண்டினா அணியின் பயிற்றுனர் ஜோர்ஜே சம்போலி வகுக்கும் வியூகமும் அணிக்கு எந்த ஒரு பலனையும் கொண்டு வரவில்லை என செசர் லுயிஸ் தெரிவித்துள்ளார். செவியா கால்பந்து கிளப்பின் நிர்வாகியாக இருந்த சம்போலி, அர்ஜெண்டினா அணியிலும் அதே ஆட்ட பாணியைக் கடைப்பிடிப்பது தவறான அணுகுமுறை என செசர் தெரிவித்தார்.

குறிப்பாக மெஸ்சியை வைத்து கொண்டு சம்போலி பலம் வாய்ந்த அணியை உருவாக்க போராடுவது அவரின் பலவீனத்தைக் காட்டுவதாக செசர் லுயிஸ் மேலும், குறிப்பிட்டார்.