கோலாலம்பூர் | பிப்பரவரி 24:-

முதுகெலும்பில் டியூமர். அடுத்தடுத்து அறுவை சிகிச்சைகள். ஒரு கட்டத்திகு மேல் இடுப்புக் கீழ் செயல் இழந்த நிலை. தாங்க முடியாத வலி – வேதனை. குடும்பத்தில் பொருளாதாரச் சிக்கல்.
இவற்றுக்குப் பிறகும் இருபது வயதிலேயே இன்ஸ்டாகிரம் இளம் தொழில் முனைவர். இது சாத்தியமாகுமா என்ற கேள்வி நம் மனதுக்குள் எழும் முன்னரே, சாத்தியப் படுத்தி சக்கர நாற்காலியிலும் சிகரத்தைத் தொட்டிருக்கிறார் இரும்புப் பெண்மணி ஷார்மினி இரமேஷ்.

இரமேஷ் – தேசம்மா தம்பதியரின் நான்கு பிள்ளைகளில் மூன்றாவது மகள் ஷார்மினி. பள்ளிப் பருவத்திலிருந்தே படிப்பில் கெட்டி; விளையாட்டில் படு சுட்டி. விளையாடுகையில் அவ்வப்போது அடிகள் படுவது இயல்பு. அந்த நேரத்தில் இடுப்புப் பகுதியில் வலி ஏற்பட ஆரம்பித்தது.

15 வயதில் தொடங்கிய அந்த வலி மேலும் மேலும் அதிகரித்தது. ஒரு கட்டத்திற்கு மேல் கால்கள் மரத்துப் போயின. வலியால் தூக்கமில்லாத இரவுகள். முன்பு போல் இயல்பாக வேகமாக நடக்க முடியாத நிலை. அதிக நேர உட்காரவும் முடியாது. ஏன் இந்த வலி எனப் புரியாமலேயே ஒன்றரை ஆண்டுகாலமாக நீடித்தது.


பல மருத்துவப் பரிசோதனைகள் தொடங்கி கோயில்கள் உட்பட இதன் தீர்வுக்காக எவ்வளவோ கஷ்டப்பட்டேன். இதனாலேயே எனது கல்வியும் பாதிக்கப்பட்டது. அடிக்கடி பள்ளிக் கூடமும் போக முடியவில்லை.
கடந்த 2017 ஆம் ஆண்டு என் முதுகுத் தண்டுப் பகுதியில் டியூமர் என்று சொல்லக்கூடிய கட்டி ஒன்று இருப்பதையும் கால்களுக்குச் செல்ல வேண்டிய நரம்புகளின் செயல்பாடுகளுக்கு அது தடையாக இருப்பதை மருத்துவர்கள் கண்டு பிடித்தார்கள். அதனை உடனடியாக நீக்கி விட வேண்டும். இல்லையென்றால் மேலும் மோசமானப் பாதிப்பைக் கொடுக்கும் என அவர்கள் கூறினார்கள்.

சுமார் 9 செண்டி மீட்டருக்கு அந்தக் கட்டி வளர்ந்திருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள். அறுவை சிகிச்சையின் வழி அந்தக் கட்டி நீக்கப்பட்டது. இருப்பினும் அந்தக் கட்டி முழுதாக நீக்கப்பட முடியவில்லை. மேலும், அந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு இடுப்புக் கீழ் என் உடல் பாகங்கள் செயல்படவில்லை. உடற்கழிவுப் பிரச்சனையும் ஏற்பட்டது. தொடர்ந்து ஃபிசியோதெராபியும் மேற்கொண்டேன்.

கொஞ்சம் கொஞ்சமாக சில அடிகள் நடக்கவும் முயற்சித்தேன். உடல் நிலை தேறி வருவதற்குக் காலம் எடுத்தது. வலியும் அதிகமாக இருந்தது. இருப்பினும், கொஞ்சம் கொஞ்சமாக குணமடையத் தொடங்கினேன்.

சில காலம் பிறகு, நீக்கப்பட்டக் கட்டி மீண்டும் வளரத் தொடங்கியது. மீண்டும் 7-8-2019 ஆம் நாள் இரண்டாவது அறிவை சிகிச்சையை மேற்கொண்டேன். கட்டி நீக்கப்பட்டு விட்டாலும் அந்த வலியை என்னால் தாங்கவே முடியவில்லை.
அந்தக் காலத்தில் என்னை அறியாமலேயே ஒரு வெறுப்புணர்ச்சி என்னுள் எழுந்தது. என்னைச் சுற்றி இருந்த எதுவுமே எனக்குப் பிடிக்கவில்லை. வலியும் அதிகரிக்கவே, என்னைக் கருனைக் கொலை செய்து விடுங்கள் என என் பெற்றோரிடம் மன்றாடினேன்.
அந்தக் காலக் கட்டம் என் வாழ்க்கையில் மிகவும் மோசமானப் பகுதி.

ஆனால், என் குடும்பமும் என் நண்பர்களும் கொடுத்த ஆறுதலும் ஊக்கமும் அவ்வெண்ணத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக என்னை வெளியே கொண்டு வந்தது. அவர்கள் என்னைப் பார்த்துக் கொண்ட விதம் எனது வாழ்வின் மறுபக்கத்தின் புதிய அத்தியாயத்தைக் காட்டியது.
மருத்துவமனையிலேயே எனது இடைநிலைப் பள்ளி இறுதித் தேர்வை எழுதினேன். ஓரளவுக்குத் தேர்ச்சியும் பெற்றேன்.


என் பெற்றோர்கள் அடிக்கடி எனக்குச் சொன்னது : இதுவும் கடந்து போகும் !
இந்த ஒரு வாசகம் தான் என்னை வாழ்வின் அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்தியது எனலாம்.

வீட்டிலேயே இருக்கும் நான், சொந்தமாக எங்கும் நகர முடியாது. எனக்கு எப்போதுமே இன்னொருவரின் உதவி இருந்து கொண்டே இருக்க வேண்டும். உதவிகள் இருக்கும்போது நான் என் கவலைப் பட்டுக் கொண்டு வீட்டிலேயே உட்காந்திருக்க வேண்டும் என மனதில் தோன்றியது.


அவ்வப்போது சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருக்கும் நான், அந்தத் தளத்தில் பலர் பல சுய தொழில் செய்வதைப் பார்த்திருக்கிறேன். பரவலாக ஆடைகள், அழகு சாதனப் பொருட்கள், சர்ப்ப்ரைஸ் டெலிவரி, உடல் எடைக் குறைப்பு பானங்கள் போன்றவைதான் அதிகமாக சமூக ஊடகங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. எனக்கு அவற்றின் மீது நாட்டமில்லை. எனக்கு விழிவில்லைகள் எனச் சொல்லப்படக்கூடிய காண்டேக்ட் லென்ஸ் மீது அதிக ஆர்வமும் ஈடுபாடும் உண்டு. எனவே, அதனையே வியாபாரமாகச் செய்யத் தொடங்கினேன். மேலும், சிறப்பாக வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சிறப்புப் பரிசுப் பொருட்களையும் சொந்தமாகவே வடிவமைத்து விற்பனை செய்யத் தொடங்கினேன்.


இன்ஸ்டாகிராமில் அதற்கான வரவேற்பு மெல்ல அதிகரித்தது.
நான் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கும்போது என் குடும்பமும் என் நண்பர்களுன் எனக்கு ஆதரவாக மட்டும் இருந்திடாமல், அவர்கள் வேலைக்குச் சென்று ஒவ்வொரு மாதமும் எனக்கானச் செலவுக்காகப் பணம் கொடுத்தும் உதவினார்கள். “ நாங்கள் இருக்கிறோம். எதற்காக நீ கவலைப்பட வேண்டும்?” என்று கூறி என்னைப் பார்த்துக் கொண்டார்கள்.

இன்று என் வியாபாரத்தின் வெற்றியால் என் குடும்பத்தின் நிதிச் சுமையைக் குறைத்தது மட்டும் இல்லாமல் என் நண்பர்களுக்கு அவ்வப்போது நான் உதவி செய்யும் வரையில் வளர்ந்திருக்கிறேன். இன்னமும் எனக்கு சமூக ஊடகத்தில் ஆதரவும் ஊக்கமும் குறையே இல்லை.


வலிகளும் வேதனைகளும் வாழ்வில் இயல்பு தான். அதனால், நாம் அழுதாலும் பரவாயில்லை. வாழ்க்கை தொடர்ந்து போகத் தான் வேண்டும். அனைத்துத் துன்பங்களுக்கும் ஒரு முடிவுப் புள்ளி கண்டிப்பாக இருக்கும், அதன் பிறகு வசந்த காலமும் நம் வாழ்க்கையில் மலரும்.
அன்று எனக்கு ஏற்பட்ட வலி மிகவும் கொடுமையானது தான். மறுப்பதற்கில்லை. அன்றே என் வாழ்வை முடித்துக் கொள்ள எனக்கு ஒரு நிமிடம் ஆகியிருக்காது. ஆனால் நான் அப்படி செய்ய வில்லை. அன்று அந்த முடிவைத் தவிர்த்ததால் தான் இன்று என்னால் நல்ல வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ முடிகிறது.
அடுத்தக் கட்டமாக எனது மேற்கல்வியைப் பற்றி சிந்தித்து வருகிறேன். மிக விரைவில் அதனையும் தொடர்வேன்.


எனது துன்பமானக் காலத்தில் எனக்கு முழு உறுதுணையாக இருந்த எனது குடும்பத்துக்கும் நண்பர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எவ்வளவு வலிகள் வந்தாலும், என்னெற்ற வேதனைகளைச் சந்தித்தாலும்
இதுவும் கடந்து போகும் என புன்னகை மலர முன்னோகிச் செல்கிறார் இரும்புப் பெண்மணி ஷாரமினி இரமேஷ்.