பாஸ் – பிகேஆர் பேச்சுவார்த்தையை நம்பிக்கைக் கூட்டணி நிறுத்திக் கொள்ளும்!

புத்ராஜெயா, செப். 8-

பாஸ் கட்சியுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கூறினாலும்கூட, நம்பிக்கைக் கூட்டணி பிகேஆர் – பாஸ் கட்சிக்கிடையிலான பேச்சுவார்த்தையை நிறுத்திக் கொள்ளும் என்று அக்கூட்டணியின் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.

இனி பாஸ் கட்சியுடன் எந்தவித பேச்சுவார்த்தையையும் நடத்துவதில்லை என்று தாங்கள் முடிவு செய்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.முன்பு மக்கள் கூட்டணியில் இருந்து வந்த பாஸ் கட்சியுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துமாறு டத்தோஸ்ரீ அன்வார் கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால், நாங்கள் அதனை நிறுத்திக் கொள்வோம் என்றும் அவர் தெரிவித்தார்.

வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தில் நம்பிக்கைக் கூட்டணி வெற்றி பெறுவதை உறுதிப்படுத்த பாஸ் கட்சியுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி முன்பு கூறியிருந்தார். நம்பிக்கைக் கூட்டணி பாஸ் கட்சியை ஏற்றுக் கொள்ளாது.

காரணம் பாஸ் கட்சியின் தொகுதிகளால் அமானா நெகாரா கட்சிக்கும், பிரிபூமி பெர்சத்து மலேசியா கட்சிகளுக்கும் பிரச்னைகள் எழும் என்றார். பாஸ் கட்சியை நம்பிக்கைக் கூட்டணியில் சேர்த்துக் கொண்டால் 5 கட்சிகள் சீட்டுகளை பகிர்ந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

பாஸ் கட்சி தனது தொகுதிகள் அனைத்தும் தமக்கு வேண்டும் என்றால், அக்கட்சிக்கே 60 சீட்டுகள் போய்விடும். அமானா உட்பட இதர கட்சிகள் எந்தத் தொகுதிகளில் போட்டியிடுவது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.