கோலாலம்பூர், செப். 8-

இருமொழி பாடத்திட்டம் குறித்து கல்வி அமைச்சிடம் 2 முறை மகஜர் வழங்கியப்போதும் துணை கல்வியமைச்சர் டத்தோ கமலநாதன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அரசுசார்பற்ற இயக்கங்கள் குற்றம் சாட்டின. அதனால் இந்த விவகாரம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

சமீப காலமாக தமிழப்பள்ளிகளில் கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களை ஆங்கில மொழியில் போதிப்பதற்கு இரு மொழிப்பாட திட்ட விவகாரம் தொடர்ந்து நீடித்து வருகின்றது. எதிர்காலத்தில் நமது நாட்டில் தமிழ்ப்பள்ளிகளும் தமிழ்மொழியும் நிலைத்திருப்பதற்காக இந்த இருமொழி பாடத்திட்டத்தை தமிழ்ப்பள்ளிகளில் அமல்படுத்தாமல் இருப்பதற்காக நாட்டில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

அந்த வகையில் பல அரசு சார்பற்ற இயக்கங்கள் ஒன்றிணைந்து மே 19 இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த இருமொழிப் பாடத்திட்டத்தை அமலுக்குக் கொண்டு வராமலிருக்க சட்ட ரீதியாக நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது என நேற்று தலைநகரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்புக் கூட்டத்தில் வழக்கறிஞர் பாலமுருகன் இதனை தெரிவித்தார்.

இவ்வாண்டு தொடக்கத்தில் இந்த இருமொழிப் பாடத்திட்டத்தை அமல்படுத்த வேண்டாம் என கல்வி அமைச்சிடம் மகஜர் வழங்கப்பட்டது. இந்த இருமொழி பாடத்திட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை விதிமுறைகளை பின்பற்ற முடியாத பள்ளிகள் இந்தத் திட்டத்திலிருந்து விலகிக் கொள்ளலாம் என கல்வி அமைச்சு எங்களுக்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பி இருந்தது. அந்தக் கடிதம் அனைத்து தமிழ்ப்பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த இருமொழி பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டிருந்த சில பள்ளிகள் இந்தத் திட்டத்திலிருந்து விலகிக் கொண்டன. ஆனால், சில பள்ளிகள் இந்த இருமொழி பாடத்திட்டத்தை பின்பற்றியே வருகின்றன என அவர் கூறினார்.

இந்த இருமொழி மொழி பாடத்திட்டம் பள்ளிகளில் அமல்படுத்த வேண்டும் என்றால் அதற்கான விதிமுறைகளும் சில நிபந்தனைகளும் உண்டு. கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தை ஆங்கில மொழியில் போதிப்பதற்கு ஆசிரியர்கள் மட்டுமின்றி பெற்றோர், பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள், பள்ளி நிர்வாகம் ஆகியோரின் சம்மதமும் வேண்டும். அதே வேளையில், அந்த இரு பாடங்களையும் ஆங்கில மொழியில் போதிப்பதற்கு ஆசிரியர்களுக்கு போதுமான பயிற்சிகளும் வழங்கப்பட வேண்டும். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு இரண்டாவது முறையாக மீண்டும் கல்வி அமைச்சிடம் மகஜர் வழங்கப்பட்டது. ஆனால், இதுவரையில் அதற்கான எந்தவொரு பதிலும் வந்தபாடில்லை. இது எங்களுக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது என அவர் வருத்தம் தெரிவித்தார்.

இதனிடையே, இன்னமும் ஒரு சில பள்ளிகளில் இந்த இருமொழிப் பாடத்திட்டம் அமலில் இருந்து வருவதால் நாங்கள் சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்திருக்கிறோம். தமிழ்ப்பள்ளிகளில் தமிழ்க்கல்வி கற்கும் மாணவர்களை அனைத்துலக நிலையில் உயர்த்தி மிகச் சிறந்த கல்விமான்களாக உருவாக்க வேண்டும் என்பதே நமக்கு இருக்கும் பெரிய சவாலாகும். அதனை கருத்தில் கொண்டு தமிழ்ப்பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்காகவே இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அவர் விளக்கமளித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் காப்பார் தொகுதி கெஅடிலான் நாடாளுமன்ற உறுப்பினர் மணிவண்ணன், சுவாராம் ஆறுமுகம், பொன்ரங்கன், பொது நலத் தொண்டர் சாமுவேல் ராஜ், நாகப்பஞ்சு, பாரதிதாசன், கிள்ளான் ஆறுமுகம் செல்லப்பா, உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.