கோலாலம்பூர் | மார்ச் 16

கோ.சா என்று அழைக்கப்படும் அமரர் தமிழவேள் கோ.சாரங்கபாணி சிங்கை, மலாயாவில் தமிழும் தமிழரும் நிலைப்பெற்று இருப்பதற்கு தன்னையே ஈகப்படுத்திக் கொண்ட வரலாற்று நாயகர்.

தமிழவேள் கோ.சாரங்கபாணி தமிழ்நாட்டின் தஞ்சை மாவட்டத்தில் 20-04-1903ல் பிறந்து தமது 21ஆம் வயதில் 1924ல் சிங்கப்பூர் வந்தார். சிங்கப்பூரிலும் பின்னர் மலாயாவிலும் தமிழர் திருநாள் கண்டவர். அப்போதைய மலாயா சிங்கப்பூரில் பல வகையிலும் தமிழ்த் தொண்டாற்றினார்.

மலாயாவில் வாழ்ந்த தமிழர்கள் குடியுரிமை பெற்றவர்களாக வாழவும், தாய்மொழியாம் தமிழோடு தமிழ்க் கலை இலக்கியத்தைப் போற்றி வளர்த்தெடுக்கவும் வேண்டி பல்லாற்றானும் பாடாற்றியவர்.

பிரிட்டிசாரின் காலனித்துவ ஆட்சியின்போது மலாயா இரப்பர் தோட்டங்களில் தொழிலாளிகளாக இருந்த தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகளைக் கண்டு மனம் பொறுக்காமல் கொதித்தெழுத்து தமிழர் சீர்திருத்த சங்கத்தின்வழி போராடியவர்.

தமிழ் முரசு என்ற நாளிதழைத் தொடங்கி மலாயாவிலும் சிங்கையிலும் தமிழியச் சிந்தனைகள் பரவுவதற்கும் தமிழர் விழுமியங்கள் நிலைபெறவும் ஓயாது உழைத்து வெற்றி கண்டவர். மிகுந்த தமிழ்ப்பற்று கொண்டவராகவும், தமிழர் நலமொன்றையே மேலாகக் கருதியவராகவும் திகழந்தார்.

தமிழ் முரசு நாளிதழ் வழியாகவே எழுத்தாளர் பேரவை, மாணவர் மணிமன்ற மலர், தமிழ் இளைஞர் மணிமன்றம் ஆகிய அமைப்புகளை உருவாக்கினார். இதன் வழியாக ஆயிரமாயிரம் எழுத்தாளர்களையும், கவிஞர்களையும், பேச்சாளர்களையும், சிந்தனையாளர்களையும் உருவாக்கிக் காட்டினார். தமிழகத்திலிருந்து மிகச் சிறந்த அறிஞர்களையும் சான்றோர்களையும் தலைவர்களையும் அழைத்துவந்து நாடுதழுவிய நிலையில் தமிழர்களிடையே தமிழ் உணர்வை ஊட்டி மாபெரும் தமிழ் எழுச்சியை ஏற்படுத்தினார்.

தவத்திரு குன்றக்குடி அடிகளார் 1955ல் கோலாலம்பூர் வந்திருந்தபோது கோ.சா அவர்களுக்கு “தமிழவேள்” எனும் சிறப்புப் பட்டமளித்துப் பாராட்டினார்.

அனைத்திற்கும் மேலாக, மாலாயாவிலும் சிங்கப்பூரிலும் தமிழ்மொழிக் கல்வி நிலைப்பதற்கு மிக உறுதியான அடித்தளத்தை ஏற்படுத்தியவர் அமரர் கோ.சா என்பது பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ள வரலாறு. மலாயாவில் முதன் முதலாகப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டபோது அதில் சமற்கிருத மொழியைப் பாட மொழியாக வைக்கவேண்டும் என பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரி பரிந்துரை செய்தார். ஆனால், அமரர் கோ.சா இந்தப் பரிந்துரையை மிகத் தீவிரமாக எதிர்த்தார். பல்கலைக்கழகத்தில் தமிழயே வைக்கவேண்டும் என்று போராடினார்.

பல்கலைக்கழகத்தில் தமிழை இடம்பெறச் செய்வதற்காக ‘தமிழ் எங்கள் உயிர்’ என்ற நிதித்திட்டத்தைத் தொடங்கி நாடுமுழுவதும் சுற்றித்திரிந்து பணத்தைத் திரட்டி தமிழைக் காப்பாற்றிய பெருமகனார் இவராவார். இவருடைய அயராத உழைப்பின் பயனாகவும் தமிழ்மக்கள் ஒன்றுதிரண்டு வழங்கிய ஆதரவினாலும் மலாயா பல்கலைக்கழகத்தில் தமிழை முதல் மொழியாகக் கொண்ட இந்திய ஆய்வியல் துறை அமைந்தது.

‘தமிழர் திருநாள்’ என்ற பெயரில் மாபெரும் தமிழ்; தமிழர் எழுச்சிப் பெருவிழாவினை ஏற்படுத்தி மலாயாவில்(மலேசியாவில்) வாழும் தமிழர்களிடையே மாபெரும் தமிழ் அறிவையும் தமிழ் உணர்வையும் தமிழின எழுச்சியையும் ஏற்படுத்தி, இன்றளவும் தமிழும் தமிழரும் தங்களின் தாய்மொழி உரிமையோடு வாழ்வதற்குரிய வாழ்வாதாரத்தை வழங்கிய தமிழவேள் கோ.சாரங்கபாணி என்னும் அந்த மொழி, இனநலச் சான்றோனை நினைவு கொள்வது நம் கடமையாகும்.

தமிழவேள் கோ சாரங்கபாணியின் வாழ்க்கைச் சுவடுகள் –

20-04-1903 – தமிழகத்தின் தஞ்சை மாவட்ட, திருவாரூரைச் சார்ந்த விஜயபுரத்தில் கோவிந்தசாமி, தாயாரம்மாள் இனியார்க்குப் பிறந்தார்.

1924 – சிங்கைச் செலவு , கணக்காயர் பணி.

16-1-1929 – “முன்னேற்றம்” வார இதழ் தொடக்கம், அதில் துணை ஆசிரியர் பொறுப்பு.
(1930) – ஆசிரியர் பொறுப்பு.

10-12-1929 – பெரியார் ஈ.வே.ரா. மலையாக வருகை (பினாங்கு), ஈப்போவில் நடந்த முதல் அகில மலாயா தமிழர் மாநாட்டை அ.சி.சுப்பையா அணியின் துணையுடன் கூட்டியதில் , பெரியார் தொடக்கவுரை ஆற்றினார்.

3-8-1930 – தமிழர் சீர்திருத்தச் சங்கம் அமைப்பு (22-7-1932 பதிவு) இச்சங்கத்தில் தொடக்கச் செயலாளர் பின்னர் தலைவர். 1930 “சீர்திருத்தம்” மாதிகை தொடக்கம்.

6-7-1935 – “தமிழ் முரசு” வார இதழ் தொடக்கம்.

1937 – திருவாட்டி லிம் பூன் நியோவைப் பதிவுத் திருமணம்.

1-2-1937 – “தமிழ் முரசு” தாளிகையானது. (நாளிதழ்)

1939 – “அகில மலாயா தமிழர் சங்கத்தை” உ. இராமசாமி தமைமையில் ஆரம்பித்தார். “REFORM” ஆங்கிலத் திங்களிதழ் மலர்ந்தது.

2-12-1940 – “INDIAN DAILY MAIL” ஆங்கிலத் தாளிகைத் துவக்கம்.

1946 – கல்கத்தா வழியாகத் தமிழகச் சென்றார்.

1-8-1951 – “தமிழர் பிரதிநிதித்துவ சபை” அமைத்தல். பெர்லிசு மாநிலத்தில் தமிழர் திருநாள் வித்திடப்பட்டது. 14-1-1952 சிங்கையிலே தமிழர் திருநாள் தொடக்கம்.

14-12-1954 – தந்தைப் பெரியார் இரண்டாம் முறையாக மலையாக வருகை.

24-2-1955 – “தமிழ் எங்கள் உயிர்” நிதி அமைக்கப்பட்டது. (1955) குன்றக்குடி அடிகளார் அவர்களால் “தமிழவேள்” எனும் பட்டம் வழங்கப்பட்டது.

14-1-1956 – “மலேசியத் தமிழ் இளைஞர் மணி மன்றம்” பதிவு பெற்றது. அத்தோபர் திங்களில் மலாயா பல்கலைக்கழக இந்தியப் பகுதி தொடக்கம் (தமிழ்த்துறை)

31-12-1956 – “INDIAN DAILY MAIL” நிறுத்தம்.

1957 – சிங்கப்பூர் குடியுரிமைப் பதிவு.

1959 – மக்கள் செயல் கட்சி ஆட்சித் துவக்கம். தமிழும் அதிகாரத்துவ மொழியாக்கல்.

16-4-1962 – “தேசதூதன்” மாலைத் தாளிகைத் தொடக்கம்.

19-5-1963 – பெந்தோங் ரவூப்பில் மணிவிழா, தங்கச் சுவடியில் “தமிழ்க் காவலர்” பட்டம்.

16-6-1963 – தெலுக் இந்தான் நகரில் வள்ளல் சிதம்பரம் தலைமையில் மணிவிழா

15-11-1964 – தைப்பிங் நகரில் மணிவிழா தாய்க்குழுவினர் விழா எடுத்தனர்,

16-1-1966 – ‘முத்தமிழ்க் காவலர்’ வழங்கியவர் தவத்திரு தனிநாயக அடிகள்.

3-2-1969 – அறிஞர் அண்ணா இரங்கல் கூட்டம்.

1971 – செத்தம்பரில் இந்திய அதிபர் வி.வி. கிரி அவர்களுடன் சந்திப்பு.

23-9-1973 – சிங்கை குடியரசு திராவிட முற்போக்குக் கழகத்தில் முத்தமிழ் விழா (தமிழவேள் கலந்து கொண்ட இறுதிப் பொது நிகழ்ச்சி)

24-12-1973 – பெரியார் ஈ.வே.ரா. மறைவு.

16-3-1974 – அதிகாலை 4.00 மணிக்கு சிங்கை “ஊட்ரம்” மருத்துவமனையில் தமது 71-வது வயதில் நீங்காத் துயில்.