கோலாலம்பூர் | மார்ச் 20:-

நாடறிந்த கல்வியாளரும் மாணவர்களால் போற்றப்படும் பேராசிரியருமான முனைவர் மனோன்மணியின் மீது இந்து ஆகம அணி இயக்கத்தைச் சேர்ந்த அருண் துரைசாமி அண்மையில் தொடுத்திருக்கும் அடிப்படையற்ற காழ்ப்புணர்ச்சி குற்றச்சாட்டுகளை மலேசியத் தமிழர் தேசியப் பேரவை கண்டிக்கிறது.

அருண் துரைசாமியும்  இந்து ஆகம அணியும் அண்மைய காலமாக அது சார்ந்த பணிகளை கவனிக்காமல் தமிழரின் வரையறைகளை கண்காணித்துவம் செய்ய முற்படுவதை நாம் கவனித்து வருகிறோம். அந்த வரிசையில் இப்போது இவர்களது தாக்குதல்கள் முனைவர் அவர்களை நோக்கி உள்ளது.

அருண் துரைசாமி, ஒரு காணொளியில் அனுப்புநர் பெயர் இல்லாத ஒரு மொட்டைக் கடிதத்தை மேற்கோளாகக் காட்டி முனைவர் மனோன்மணி, தமிழ் படிக்கும் மாணவர்களுக்குத் தூய தமிழ் பெயரைச் சூட்டி அவர்களை இறைமறுப்பாளர்களாகவும் இந்து மதத்துக்கு எதிரானவர்களாகவும் உருமாற்றி வருகிறார் என்ற விந்தையானக் குற்றச்சாட்டை முன்வைக்கிறார்.

பெயர் மனிதனின் அடிப்படையான அடையாளம். அது இனம் மொழி சார்ந்து அமையும் போது ஒரு நபருக்கு  அது தொடர்பான விருப்பத்தையும் ஆர்வத்தையும் மேலும் அதன் வேர் பிடித்து செல்ல ஒரு தூண்டுதலையும் ஏற்படுத்தும். அதனால்தான் தம் இனம் மொழி சார்ந்த பெயர்களை குழந்தைகளுக்கு சூட்ட வலியுறுத்துகிறோம். நம் நாட்டிலேயே இளம் பெற்றோர் நற்றமிழ் பெயர்களை தேடி சூட்டுவதையும் காண்கிறோம்.

மொழியியல் புலங்களில் மாணவர்களுக்குள் ஓர் உளவியல் ஆர்வத்தை ஏற்படுத்த ஆசிரியர்கள் கற்றுத் தரும் மொழி சார்ந்த பெயரைச் சூட்டுவதை பார்க்கின்றோம். எடுத்துக்காட்டாக சப்பானிய மொழி வகுப்பில் மாணவர்கள் சப்பானிய பெயரை இட்டுக்கொள்வதை பார்க்கின்றோம். இதன் அடிப்படையில் தான் தமிழ் பேராசிரியாரான முனைவர் மனோன்மணி தம் மாணவர்களுக்கு நல்ல தமிழ் பெயர்களை வழங்கினார். மாணவர்களும் மகிழ்வோடு ஏற்றிருக்கின்றனர். இது கற்றல் கற்பித்தலில் ஒரு அணுகுமுறை.

இந்த நோக்கத்தை திரித்து, ஏதோ சிந்தனை திணிப்பு நடப்பது போன்ற தோற்றத்தை அருண் துரைசாமி கொடுப்பது அறிவுக்கு புறம்பானது. மேலும் நச்சுத்தன்மையானது.

முனைவர் மனோன்மணி மாணவர்கள் போற்றும் ஆசிரியராக அறியப்படுபவர். அது மட்டுமல்லாமல் தமிழ் சார்ந்த நூல்களையும் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

மலேசியத் தமிழர் தேசியப் பேரவை முனைவர் மனோன்மணியின் பணியை போற்றுகிறது மேலும் ஊக்கப்படுத்துகிறது. அருண் துரைசாமி போன்ற தீவிர மதவாதச் சிந்தனை கொண்டவர்களின் தாக்குதல்களை எதிர்நோக்க அரணாக நிற்கும். அவருக்கு  ஆதரவாக நிற்கும் அதே வேளையில் உயர்கல்வி அமைச்சு உட்பட இதர துறைகளுக்கும் இது தொடர்பாக கடிதம் அனுப்பும் என்று மலேசியத் தமிழர் தேசியப் பேரவையின் துணைத் தலைவரும் வழக்கறிஞருமான இரா.பாலமுரளி தெரிவித்தார்.