மெட்ரிட், செப்.10 –

ஸ்பெயின் லா லீகா கால்பந்துப் போட்டியில் பார்சிலோனா 5 – 0 என்ற கோல்களில் எஸ்பான்யோலை வீழ்த்திய வேளையில் ரியல் மெட்ரிட் 1 – 1 என்ற கோலில் லெவேந்தேவுடன் சமநிலைக் கண்டுள்ளது. எஸ்பான்யோலுக்கு எதிரான ஆட்டத்தில் பார்சிலோனாவின் உச்ச நட்சத்திரம் லியோனெல் மெஸ்சி மூன்று கோல்களைப் போட்டு ஹாட்ரீக் சாதனையைப் படைத்துள்ளார்.

பார்சிலோனா கிளப்பில் லியோனெல் மெஸ்சி தனது 38 ஆவது ஹாட்ரீக் வெற்றியைப் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. 26 , 35 ஆவது நிமிடங்களில் இரண்டு கோல்களைப் போட்ட மெஸ்சி, 67 ஆவது நிமிடத்தில் தனது ஹாட்ரீக் கோலைப் போட்டார்.

இந்த ஆட்டத்தில் பார்சிலோனாவின் இதர கோல்களை ஜெராட் பிக்கேவும், லுவிஸ் சுவாராசும் போட்டனர். இதனிடையே சந்தியாகோ பெர்னாபூ அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ரியல் மெட்ரிட் 1 – 1 என்ற கோல்களில் லெவேந்தேவுடன் சமநிலைக் கண்டது.

தொடர்ச்சியாக இரண்டு லீக் ஆட்டங்களில் சமநிலைக் கண்டுள்ள ரியல் மெட்ரிட் தனது பரம வைரியான பார்சிலோனாவைக் காட்டிலும் நான்கு புள்ளிகள் வித்தியாசத்தில் பின் தங்கியுள்ளது. முன்னணி தாக்குதல் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்றி களமிறங்கிய ரியல் மெட்ரிட் 12 ஆவது நிமிடத்தில் ஒரு கோலில் பின் தங்கியது.

லெவேந்தேவின் தற்காப்பு அரணை உடைப்பதில் கடும் சிரமத்தை எதிர்நோக்கிய ரியல் மெட்ரிட் , 36 ஆவது நிமிடத்தில் வாஸ்குவேஸ் மூலம் ஒரு கோலைப் போட்டு ஆட்டத்தை சமப்படுத்தியது.