கோலாலம்பூர், ஏப். 6-

15ஆவது பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியென அம்னோ தலைவர் டத்தோஶ்ரீ ஸாஹிட் ஹமிட் அறிவித்துள்ள நிலையில் அதுகுறித்து பல்வேறான கருத்துகள் நிலவுகின்றன. இச்சூழ்நிலையில் கிம்மா எனப்படும் மலேசியா இந்திய முஸ்லிம் காங்கிரஸ் அம்னோவுடன் தான் இணைந்திருக்குமென அதன் தலைவர் டத்தோஶ்ரீ சையிட் இப்ராகிம் கூறினார்.

தேசிய முன்னணி ஆட்சி அதிகாரத்திலிருந்தபோது இந்நாட்டிலுள்ள இந்திய முஸ்லிம்களின் வாழ்வாதாரத்திற்கு அடித்தளமிட்டது அந்த கூட்டமைப்புதான். தற்போது அவர்கள் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது அவர்களுடன் நிலைத்து இருப்பது தான் மனிதாபிமானம் என அவர் குறிப்பிட்டார்.

மலேசிய இந்திய முஸ்லிம்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கியதோடு கல்வி பொருளாதார துறைகளில் இச்சமூகத்தினர் வெற்றி நடை போடுவதற்கு அம்னோ தொடர்ந்து உதவி புரிந்ததையும் அவர் நினைவுகூர்ந்தார்.

தற்போதைய சூழ்நிலையில் பிரதமருக்கும் நடப்பு அரசாங்கத்திற்கும் ஆதரவு தெரிவித்தாலும் அம்னோவுடன் தான் நாங்கள் இணைந்து இருப்போம்.

45 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கட்சி மலேசிய இந்திய முஸ்லிம்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்குத் தொடர்ந்து உழைத்து வருகின்றது. இக்கட்சி தனது நிலையிலிருந்து ஒருபோதும் விலகவில்லை. சமுதாயத்தை மேம்பாட்டிற்கு இட்டுச்செல்ல எங்களால் முடிந்த அனைத்து நடவடிக்கை களையும் முன்னெடுத்து வருவதாக சையிட் இப்ராகிம் கூறினார்.

இந்நிலையில் புதிய கட்சிகள் மலேசிய இந்திய முஸ்லிம்களைப் பிரதிநிதிபதாக கூறினாலும் கிம்மாவிற்கு தனி வரலாறு உண்டு. பழமை வாய்ந்த இக்கட்சி மலேசிய இந்திய முஸ்லிம்களின் மனதில் என்றும் நிலைத்திருக்கும். ஏற்றமிகு திட்டங்களை முன்னெடுக்கும் என அவர் உறுதி அளித்தார்.

இந்நிலையில் 15வது பொதுத் தேர்தலில் தங்களின் கட்சி போட்டியிடுவதற்குப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதையும் அவர் மறுக்கவில்லை. வெற்றி பெறக்கூடிய தொகுதியில் நிச்சயம் போட்டியிடுவோம் என அவர் கூறினார். எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகின்றோம் என்பது முக்கியமல்ல. வெற்றி பெற வேண்டியதுதான் கட்டாயம் என கிம்மா தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் சையிட் இப்ராகிம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் கிம்மா கட்சியின் செயலாளர், ஜோகூர் மாநிலத் தலைவர் டத்தோ அன்வார், தகவல் பிரிவுத் தலைவரும் கலந்து கொண்டார்கள்.