கோலாலம்பூர் | ஏப்ரல் 7:-

அரசாங்கத்திடமிருந்து குத்தகைத் திட்டங்களைப் பெற விரும்புவோர் தொடக்கத்தில் ஐந்து லட்சம் வெள்ளி மதிப்பிலான பங்கு பத்திரத்தை வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுவார்கள் என்று பொதுப்பணி அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபடிலா யூசோப் தெரிவித்தார்.

“நூற்றுக்கணக்கான அரசாங்கத் திட்டங்களை பொதுவில் குத்தகைக்கு விடுவதில் குறிப்பிட்ட தரப்பினரே ஆக்கிரமித்து  வருகின்றனர். இதுபோன்ற சூழல் வருங்காலங்களில் நிகழாமல் இருப்பதைத் தடுக்க அமைச்சு மேற்கொண்ட நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும்” என்றார் ஃபடிலா.

இதுபோன்ற செயலில்  ஈடுபடும் தரப்பினரின்  நடவடிக்கைகளை 100 விழுக்காடு  துடைத்தொழிக்கலாம் என்பதை உறுதியாகக் கூற முடியாது. எனினும், இதனைக் குறைக்கும் அல்லது வாய்ப்பு ஏற்படுத்தாமல் இருப்பதற்கு சாத்தியம் உள்ளது என்று தமது அமைச்சில் நடைபெற்ற ஊடக தலைமை ஆசிரியர்களுடனான அமைச்சின் விளக்கமளிப்பு கூட்டத்தில் உரை நிகழ்த்துகையில் குறிப்பிட்டார்.

“தங்களின் வெவ்வேறு நிறுவனங்கள் வழி இவ்வளவு பெரிய தொகையில் குத்தகை எடுப்பதற்கு இவர்கள் மிகவும் சிரமப்படுவார்கள். இதன்  பொருட்டு அமைச்சு மற்றும் அரசாங்க நிறுவனங்களின் குத்தகை திட்டம் அல்லது ஒருங்கிணைப்பு பணிகளுக்கு 5 லட்சம் வெள்ளி மதிப்பிலான உத்திரவாத பங்கு பத்திரம் நிபந்தனையாக விதிக்கப்படுகிறது” என்றார்.

கடந்த ஏழாண்டுகளாக அரசாங்க குத்தகைகளை பொது  மக்களுக்கு விடுவதில் ஆதிக்கம் செலுத்தி வந்த எழுவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எஸ்பிஆர்எம்) நேற்று முன் தினம் கைது செய்தது. இவர்கள் சம்பந்தப்பட்ட குத்தகைத் திட்டங்களின் மதிப்பு 3.8 பில்லியன் வெள்ளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

இவர்கள் மீதான விசாரணை வழி 2 ஹெலிகாப்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு 644 தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களின் 10 கோடி வெள்ளி சேமிப்பைக் கொண்ட வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. அதே வேளையில், இவர்களின் தலைவனான 47 வயது டத்தோவின் வீட்டில் இருந்து 3.5 லட்சம் வெள்ளி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இத்தகு நடவடிக்கையில் ஈடுபடுவோர்  மேல் விசாரணைக்காக ஊழல் தடுப்பு ஆணையத்திடம் ஒப்படைக்கப்படுவர். இதில் அரசாங்க ஊழியர்கள் சம்பந்தப்படுவார்களேயானால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அரசாங்க குத்தகை திட்டங்களில் விதிமுறைகளை மீறுவோரைத் தாங்கள் நிச்சயம் பாதுகாக்கப் போவதில்லை என்று ஃபடிலா வலியுறுத்தினார்.