மலேசியத் திருநாட்டில் இந்திய இளைஞர்களை சமூக பொருளாதார துறையில் மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு இளைஞர் இயக்கம் தான் மலேசிய இந்தியர் இளைஞர் மன்றம். ஆக, இந்த இயக்கமானது ஒட்டுமொத்த மலேசிய இந்திய இளைஞர்களுக்கானதாகும் என அதன் தலைவர் டேனிஷ் பேசில் தெரிவித்தார்.

குறிப்பிட்ட ஓர் இனத்திற்காகவோ மதத்திற்காகவோ இந்த இயக்கம் செயல்படவில்லை என்பதனை நாங்கள் இதன்வழி கூறிக்கொள்ள விரும்புவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

எங்களின் நோக்கமானது சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கியிருக்கும் இந்திய இளைஞர்களை வலுப்படுத்தி அவர்களின் மேம்பாட்டிற்கு வழிவகுப்பதாகும். எங்கள் நோக்கத்தில் நாங்கள் மிகத் தெளிவாக இதுநாள் வரையிலும் செயல்பட்டு வருகிறோம்.

மதத்தைச் சார்ந்து ,மொழியைச் சார்ந்து எழும் எந்த பிரச்சினையிலும் மலேசிய இந்தியர் இளைஞர் மன்றம் ஒரு போதும் தலையிடாது என்பதனையும் இதன்வழி தெரிவித்துக்கொள்கிறோம்.

அண்மையக் காலமாகப் பரபரப்பாக பேசப்பட்டு வரும் புத்தாண்டு தொடர்பான பிரச்சனைகளில் நாங்கள் எங்களை ஈடுபடுத்திக்கொள்ள விரும்பவில்லை என்பதனையும் இதன்வழி தெரிவித்துக்கொள்கிறோம்.

மலேசிய இந்திய இளைஞர் மன்றம் என்ற அடிப்படையில் இந்த இயக்கமானது ஒட்டுமொத்த இந்திய சமூகத்திற்கானதாகும். ஆகையால் எங்களின் நிலைப்பாடானது நாங்கள் இந்திய சமூகத்தின் அங்கமாக விளங்கும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்திய முஸ்லிம், சீக்கியர்கள், கிறித்தவர்கள், சிலோன் என அனைத்துத் தரப்பினரைச் சார்ந்த  இளைஞர்களை உறுப்பினர்களாகக் கொண்டு உள்ளோம். அதன் காரணமாக அனைவரது மதம் – இனம் சார்ந்த நம்பிக்கைகளுக்கும் உரிமைகளுக்கும் என்றும் மதிப்பளித்து செயல்பட்டு வருகிறோம்.

இந்த வேளையில் ஒட்டு மொத்த இந்திய சமூகத்திற்கும் மலேசிய இந்திய இளைஞர் மன்றத்தின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம் என டேனிஷ் பேசில் கூறினார்.

இனிய சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்