வாஷிங்டன், செப். 10-
பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பை சந்திக்கும் போது விசா கட்டுப்பாட்டை நீக்குவது பற்றி விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா விதித்த 7 நிபந்தனைகளில் 6 நிபந்தனைகளுக்குத் தீர்வு காணப்பட்டு விட்டன, ஆனால் இந்த விசாவை அங்கீகரிப்பதற்கான விகிதம் 97 விழுக்காட்டிற்கும் மேல் இருக்க வேண்டியது அவசியமாகும் என்று அமெரிக்காவுக்கான மலேசிய தூதர் டான்ஸ்ரீ டாக்டர் ஸுல்ஹஸ்னான் ரபிக் தெரிவித்தார்.  இதில் 3.4 விழுக்காடு விகிதம் நிராகரிக்கப்பட்டுள்ளதால் இதைப் பற்றித்தான் சந்திப்பின் போது விவாதிக்கக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து கோலாலம்பூரில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் இலாகாக்களில் பலமுறை விவாதிக்கப்பட்டு விட்டது. இந்த விகித நிராகரிப்புக்கான விண்ணப்பத்தை தனிநபர்கள் செய்ததால் அதை கோலாலம்பூரிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தடுக்க முடியவில்லை என்று பிரதமரின் வாஷிங்டன் வருகை தொடர்பில் விளக்கமளித்துக் கொண்டிருந்த போது செய்தியாளர்களிடம் ஸுல்ஹஸ்னான் ரபிக் குறிப்பிட்டார்.

இதற்கு முன்னதாக கடந்த 2014 ஏப்ரல் மாதத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா மலேசியாவிற்கு வருகையளித்திருந்த போது விசா கட்டுப்பாட்டை நீக்குவது பற்றி அவருடன் நஜீப் கலந்துரையாடினார். இத்திட்டத்தின் மூலம் மலேசியர்கள் அமெரிக்காவிற்கு விசா இன்றி வர்த்தகம், சுற்றுலாவுக்காக கூடியபட்சம் 90 நாட்கள் சென்று தங்க முடியும்.