கப்பாளா பத்தாஸ் | ஏப்ரல் 21 :-

முதுமை காலத்தில் பழைய நினைவலைகளை நினைத்து பலரும் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கும் வேளையில், பள்ளி நாட்களில் உடனிருந்த நண்பர்களை மீண்டும் ஒன்று சேர்த்து நினைவலைகளை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு பலருக்கு கிடைப்பதில்லை.

ஆனால் பினாங்கு கப்பாளா பத்தாசில் பழனியாண்டி பிள்ளை தமிழ்ப்பள்ளியில் படித்த சில மாணவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அண்மைய காலமாக 1970 , 1980, 1990, ஆம் ஆண்டுகளில் பள்ளியில் முதலாம் வகுப்பில் படித்த மாணவர்களின் ஒன்றுக்கூடலை மட்டுமே செய்தியாக படித்திருப்போம். ஆனால் 1963 ஆம் ஆண்டில் பழனியாண்டி தமிழ்ப்பள்ளியில் பயின்ற 12 மாணவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒன்றுக்கூடி தங்களுக்கு இடையிலான பசுமையான நினைவலைகளை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

கப்பாளா பத்தாஸ் இந்தியர் முன்னேற்ற இயக்கத்தின் தலைவர் மு. வேலாயுதம் மேற்கொண்ட அரிய முயற்சியின் மூலம் இந்த 12 மாணவர்களும் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. 1963 ஆம் ஆண்டில் 30 மாணவர்கள் அப்போது முதலாம் ஆண்டில் கால் பதித்ததாக வேலாயுதம் தெரிவித்தார்.

ஆனால் அவர்களில் சிலர் காலமாகி விட்டதால், தற்போது எஞ்சியிருக்கும் சிலரை மட்டுமே தம்மால் ஒன்று திரட்ட முடிந்ததாக அவர் கூறினார். இதற்காக தாம் தனி புலனக் குழுவை அமைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார். சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் அனைவரும் ஒன்று கூடி பழைய கதைகளை பேசி மகிழ்ந்தது மன நிறைவை தந்துள்ளதாக வேலாயும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் ஒரே நிறத்திலான சட்டைகளையும் சேலைகளையும் அணிந்துக் கொண்டதும் அவர்களின் நட்பின் அழகை உணர்த்தியது.

குடும்பம், வேலை என கடந்த 40 ஆண்டுகளை குடும்பத்திற்காக செலவிட்ட தங்களுக்கு தற்போது மீண்டும் தங்களின் நட்பை புதுப்பிக்க கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பு குறித்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளை பின்பற்றி நடத்தப்பட இந்த ஒன்று கூடலில், அறுசுவை உணவும், பழைய நினைவுகளுக்கு மெருகூட்டும் இசை நிகழ்ச்சியும் மேலும் இனிமை சேர்த்தன.

தொலைந்து போன அந்த நட்புகளை மீண்டும் சந்தித்த பூரிப்பானது அவர்களின் வார்த்தைகளின் வழியாக காண முடிந்தது.